தொழில்நுட்பங்களில் 2 முகங்கள்-ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி ஆண்டு விழாவில் ரூபா குணசீலன் பேச்சு

 

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 37-வது ஆண்டு விழா கல்லூரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் விழாவிற்குத் தலைமை வகித்தார். மாணவர் மன்றத் தலைவர் எம்.வர்ஷினி வரவேற்றுப் பேசினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்மற்றும் செயலர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) ரூபா குணசீலன் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: ‘இன்றைய உலகில் நாம் இருவகையான தொழில்நுட்பத்தின் முகங்களைக்காண்கிறோம். அதில் ஒன்று நன்மை தரக்கூடியது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவக் கூடியது. நாம் அதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்குள் நல்லெண்ணத்தை விதைக்க வேண்டும். நற்செயல்கள் செய்ய, நல்லெண்ணங்களே பாலம் அமைத்துத்தருகின்றன. மாணவர்கள் அனைத்து தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொள்ளவேண்டும். இன்று வளரும் நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்த நாடுகளிலும் தொழில்நுட்ப இடைவெளி இளைய சமுதாயத்தினரிடையே அதிகரித்துவருகிறது. கல்வி நிறுவனங்கள் அதற்கான விதையை உங்களுக்குள் விதைக்கின்றன. புதிய சிந்தனைகள் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப இடைவெளியை நிரப்பலாம்’ இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து கல்வி, தேசிய மாணவர்படை, நாட்டுநலப் பணித்திட்டம், விளையாட்டு மற்றும் பல்வேறு மன்றங்களில் சிறந்து விளங்கிய 90 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் இளநிலை பட்டப்படிப்பில் சிறந்த மாணவராக டி.கார்த்திபன் (பி.காம். நிதியியல் மற்றும் கணக்கியல்), முதுநிலை பட்டப்படிப்பில் சிறந்த மாணவராக எஸ்.கரண் (மேலாண்மைத்துறை)ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் மாணவர்மன்றத் துணைத்தலைவர் நிதேஷ்கிருஷ்ணா நன்றி கூறினார்.