இதயத்துடிப்பில் சந்தேகமா..? பயம் வேண்டாம்..  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன கருவி அறிமுகம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையில்  அரித்மியா போன்ற தீவிரமான இதய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும்  அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகமாகியுள்ளது.

நிகழ்வில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி கிரையோ அபலேசன் கருவியை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார். இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் முன்னிலை வகித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இதயவியல் மற்றும் எலெக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் நிபுணர் விக்ரம் விக்னேஷ் அரித்மியா பற்றி கூறுகையில்,நம் உடலில் இதயம் மற்றும் நாடித்துடிப்பு வேகமாகவும் ஒழுங்கற்றதாகவும் மாறும்போது அது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை அரித்மியா (ஒழுங்கற்ற இதயத் துடிப்பு). இந்த நோய் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதயத் துடிப்பு மற்றும் நாடித்துடிப்பில் இந்த ஒழுங்கின்மைக்கு வயது தொடர்பான இதயச் சிதைவு, இதயத்தின் மின் கடத்தல் அமைப்பில் உள்ள பிரச்சனை, இரத்த நாளங்களில் அடைப்பு போன்ற பல காரணங்களைக் குறிப்பிடலாம். அசாதாரண துடிப்புகளை இயல்பாக்குவதற்கு சில சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றுள், கிரையோ அபலேசன் சிகிச்சை முறை மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.

கிரையோ அபலேசன் என்பது ஒரு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும் இதயத் திசுக்களை உறைய வைப்பதன் மூலம் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறையாகும். சிகிச்சையின் போது, மருத்துவர் ஒரு வடிகுழாயை ரத்தக்குழாய் வழியாகச் செலுத்தி இதயத்திற்கு வழியமைக்கிறார். வடிகுழாயின் முடிவில் ஒரு ஊதப்பட்ட பலூன் உள்ளது. இது திசுவை உறைய வைக்கும் ஒரு சிறப்பு வாயு குளிரூட்டியைக் கொண்டுள்ளது. இந்த குளிர் ஆற்றலானது, ஒழுங்கற்ற திசுக்களை அழித்து ஆரோக்கியமான இதயத் துடிப்பை மீட்டெடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்வில்  தலைமை நிர்வாக அதிகாரி ராம் குமார், இத்தாலியின் மோன்சினோ இருதயவியல் மையப் பேராசிரியர் கிளாடியோ டோன்டோ, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். அழகப்பன், இதயவியல் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.