ஸ்கூட் நிறுவனத்தின் புதிய E190-E2 விமானம் அறிமுகம்!

குறைந்த கட்டணத்தில் சிறந்த விமான சேவையை வழங்கி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்கூட், சிங்கப்பூரில் இருந்து தென்கிழக்கு ஆசியாவில் 6 புதிய நகரங்களுக்கு தங்களின் விமான சேவையை விரிவுபடுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

தாய்லாந்தின் கோ சாமுய், மலேசியாவின் சிபு உள்ளிட்ட மலேசியா மற்றும் தாய்லாந்து நாட்டில் உள்ள ஹாட் யாய், குவாந்தன், கிராபி மற்றும் மிரி ஆகிய நகரங்களுக்கு இந்நிறுவனம் வாங்க உள்ள புதிய E190-E2 விமானச் சேவையை வழங்க உள்ளது. இதற்காக பிரேசில் நாட்டின் சாவோ ஜோஸ் டோஸ் காம்போஸ் நகரில் உள்ள எம்ப்ரேயர் நிறுவனம் தயாரிக்கும் E190-E2 விமானங்களை ஸ்கூட் வாங்கி உள்ளது.

இந்த விமானங்களின் முதல் டெலிவரி அடுத்த மாதம் செய்யப்படும் என்றும் முதல் விமான சேவை மே மாதம் துவங்கும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த விமானங்கள் மூலம், மற்ற நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் நேரடி விமான சேவையை இந்நிறுவனம் வழங்க இருப்பதோடு தென்கிழக்கு ஆசியா முழுவதும் மெட்ரோ அல்லாத நகரங்களுக்கும் தங்களின் விமான சேவையை ஸ்கூட் விரிவுபடுத்த உள்ளது.

எக்ஸ்ப்ளோரர் 3.0 பெயரிடப்பட்டுள்ள முதல் E2 விமானம் அடுத்த மாதம் சிங்கப்பூர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மே 7-ந்தேதி இந்த புதிய விமானத்தின் முதல் போக்குவரத்து சேவை சிங்கப்பூர் மற்றும் கிராபி, ஹாட் யாய் இடையே துவங்க உள்ளது. பின்னர், இரு நகரங்களுக்கும் சிங்கப்பூரில் இருந்து வாரத்திற்கு 7 முதல் 10 முறை விமானங்களை இயக்க ஸ்கூட் திட்டமிட்டுள்ளது. 2வது விமானமும் அதே ஏப்ரல் மாதத்தில் டெலிவரி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமானம் கோ சாமுய், குவாந்தன், மிரி மற்றும் சிபு ஆகிய 4 நகரங்களுக்கு சிங்கப்பூரில் இருந்து கூடுதலாக இயக்கப்படும். கோ சாமுய்க்கு தினசரி விமான சேவையானது மே 13 முதல் துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் அது தினசரி 2 ஆக அதிகரிக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாவது E2 விமானத்தின் மூலம், ஸ்கூட் நிறுவனம் அதன் போக்குவரத்து சேவையை மிரி மற்றும் குவாந்தனுக்கு முறையே மே 20 மற்றும் ஜூன் 3 முதல் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறையாக உயர்த்த உள்ளது.

அத்துடன் ஜூன் 5 முதல் சிபுவிற்கு வாரந்தோறும் மூன்று முறை விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இந்நிறுவனம் தற்போது உள்ள விமான சேவையுடன் சேர்த்து, சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு வாரம் 103 விமானங்களையும், வரும் ஜூன் மாதத்திற்குள் தாய்லாந்திற்கு 92 முறை வாராந்திர விமானங்களையும் இயக்க திட்டமிட்டுள்ளது.

கோ சாமுய் மற்றும் சிபு நகருக்கு விமான சேவையை துவக்குவதன் மூலம், ஸ்கூட் நிறுவனத்தின் விமான சேவையானது 69 இடங்களாக அதிகரிக்கும். E190-E2 விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவானது ஸ்கூட் இணையதளம், மொபைல் செயலி மற்றும் பிற சேனல்கள் வழியாக படிப்படியாகக் கிடைக்கும். இது குறித்து ஸ்கூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெஸ்லி தங் கூறுகையில், எங்கள் புதிய எம்ப்ரேயர் E190-E2 விமானங்கள் மூலம் மலேசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள நகரங்களில் முதல் ஆறு இடங்களுக்கு எங்கள் விமான சேவையை துவக்குவது குறித்து அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், இதில் எங்கள் விமான சேவையில் கூடுதலாக 2 இடங்களும் சேர்ந்துள்ளன.

இது ஸ்கூட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் வளர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.எங்களின் இந்த விரிவாக்கமானது, இந்த பிராந்தியத்தில் விமானப் பயணத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுகிறது. எதிர்காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களை இன்னும் அதிகமான இடங்களுடன் இணைக்கும் வகையில், புதிய விமான சேவைகளையும் துவக்குவோம் என்று அவர் தெரிவித்தார்.