கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் புதிய சகாப்தத்திற்கான தொழில்நுட்ப கருத்தரங்கு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கணினி அறிவியல் புலம், தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ‘‘எதிர்கால எல்லைகள் : புதிய சகாப்தத்திற்கான அதிநவீன தொழில்நுட்பப் போக்குகள்” என்னும் தலைப்பில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் கீதா தலைமை வகித்தார். கணினி அறிவியல் புல முதன்மையர் சர்மிளா பாராட்டுரை வழங்கினார். இந்நிகழ்விற்குத் தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் சுமதி வரவேற்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர்கள் முனைவர் ஸ்ரீமதி மற்றும் பத்மப்ரியா, நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான மேகா வெங்கடாசலபதி(பாபி), செயல் திறன் மேலாண்மைத் தலைவர் மற்றும் இயக்குநர், விர்டுசா கன்சல்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத், ஆண்ட்ரூ க்ரோ தலைமை கற்றல் அதிகாரி, டூபிள் ஆகியோரை அறிமுகப்படுத்தினர்.

பாபி, தம் உரையில் இந்தியாவில் ஐடி இண்டஸ்ட்ரீஸ், 4ஜி மொபைல் ஸ்பெக்ட்ரம் முன்னேற்றங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டையும், மென்பொருள் தொழில்களின் விரைவான வளர்ச்சி, மின்னணு ஆதாரங்களில் இருந்து தரவைப் பிரித்தெடுப்பது, செயலாக்குவது மற்றும் வழக்கு விசாரணைக்கான கண்டுபிடிப்புகளை முன்வைப்பது ஆகியவை குறித்தும் எடுத்தியம்பினார்.

ஆண்ட்ரூ க்ரோ பேசுகையில், முன்னணி டிஜிட்டல் மாற்றத்துடன் வளர்ந்து தொழில்நுட்பங்கள் 2024 பற்றியும், தற்போதைய வேலை சந்தை மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் போட்டியிடும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டிய திறமைகள் குறித்தும் மதிப்புமிக்க உரையை நிகழ்த்தினார். நிகழ்வின் நிறைவாக, தகவல் தொழில்நுட்பத் துறையின் மாணவி சுஜீதா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 360 மாணவர்களும், 6 பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.