கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினருக்கு 5 எலக்ட்ரிக் வாகனங்கள்

கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னெடுப்பில் ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சிட்டி யூனியன் வங்கி, ஆனைமலை குழுமம் மற்றும் ஸ்ரீ மஹாசக்தி ஆட்டோ ஏஜென்சி ஆகியவற்றின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் வழங்கப்பட்டது.

இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆணையாளர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். ஆறு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் ஆட்டோவில் சைரன், கேமரா வசதிகள் உள்ளது. இதனை மாநகரில் நெரிசல் நிறைந்த பகுதிகளில் பயன்படுத்த முடியும். முதல்கட்டமாக 5 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரோந்து பணிகளுக்காக 5 எலக்ட்ரானிக் ஆட்டோகளை சிட்டி யூனியன் வங்கி, ஆனைமலை குழுமம் மற்றும் ஸ்ரீ மஹாசக்தி ஆட்டோ ஏஜென்சி ஆகிய நிறுவனங்கள் பங்களிப்பில் முதல் கட்டமாக இந்த ஐந்து ஆட்டோக்களை காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு ரோந்து பணியைத் தீவிரப் படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். இதில், பல்வேறு வசதிகள் இருப்பதாகவும் காவல்துறைக்குப் பயன்படும் வகையில் இருக்கும் எனவும் கூறினார். இவற்றை வடவள்ளி, கரும்புக்கடை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப இருப்பதாகவும் காவலர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆட்டோவிலிருந்து பொதுமக்களிடம் பேசுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் குறுகலான பாதைகளில் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ மஹாசக்தி ஆட்டோ ஏஜென்சியின் நிர்வாக இயக்குநர் தனசேகரன் பேசுகையில், ‘இந்த வாகனத்தில் சைரன், கேமரா, ஒலிபெருக்கி, உள்ளிட்ட பல வசதி வடிவமைப்பு எங்கள் தரப்பில் செய்திருந்தோம். இது மிகவும் அமைதியாகக் குறித்த இடத்தை எளிதாக அடைய உதவும்,மாசுபாட்டைத் தவிர்க்கவும் பசுமையான சூழலுக்குப் பங்களிக்கவும்,எரிபொருள் செலவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் குறைக்கவும் உதவுகிறது. ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை மின்கலம் (பேட்டரி) உத்தரவாதம் உள்ளது. தமிழகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை விநியோகம் செய்து வருகிறோம். மதுரை மற்றும் கோவையில் ஷோரூம்கள் உள்ளன.

இந்நிகழ்ச்சியில், கோவை நகர தெற்கு காவல் துணை ஆணையர் சரவணகுமார், காவல்துறை துணை ஆணையர் (தலைமையகம்) ஆர்.சுகாசினி, சிட்டி யூனியன் வங்கி நிர்வாகிகள், ஆலைமலை குழும நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.