ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையும் தமிழ்த்துறையும் சான்லாக்ஸ் பதிப்பகத்துடன் இணைந்து இலக்கிய மொழிபெயர்ப்பு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தினர்.

கருத்தரங்கத்திற்குக் கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை தாங்கி, நாம் வாழும் ஒரே வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற வேண்டுமானால் நூல்களைப் படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக நேபாளத்தின் மக்கவால்பூர் கல்லூரிப் பேராசிரியர் லோக்ராஜ் சர்மா கலந்து கொண்டு, பேசுகையில்,  வேறுபட்ட கலாச்சாரங்களுக்கு இடையில் புரிதலை உருவாக்குவதில் மொழிபெயர்ப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்றார். காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பா. ஆனந்தகுமார், உலகமயமாகி வரும் தற்போதைய சூழலில் மொழிபெயர்ப்பாளர்கள் கலாச்சார உறவுகளை அறிந்து கொண்டு மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டும்.

இந்திய மொழிகளுக்கு இடையில் மொழிபெயர்த்தல், மேற்கத்திய மொழிகளில் மொழிபெயர்த்தல் பற்றிக் குறிப்பிட்ட அவர், இலக்கியத்தை மொழிபெயர்க்கும்போது நூலின் உணர்வை வாசகருக்குக் கொண்டு சேர்ப்பதே முதன்மையானது என்றார்.

தொடர்ந்து நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் பாலமுருகன் பேசுகையில், உலகளாவிய அளவில் மொழிபெயர்ப்புகளுக்கான வாய்ப்புகளைக் குறிப்பிட்டார். இக்கருத்தரங்கில் பிற கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்து இணைய வழியிலும் பார்வையாளர்கள் பலர் பங்கேற்றனர்.