இயற்கை மருத்துவ சிகிச்சையில் சிறந்த சீதாராம் ஜிண்டாலுக்கு பத்ம பூஷண் விருது

சமூகத் தொண்டு மற்றும் இயற்கை மருத்துவச் சிகிச்சையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அதை போற்றி கவுரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது டாக்டர் சீதாராம் ஜிண்டாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஈடில்லாத சமூக மேம்பாட்டு முயற்சிகளில், குறிப்பாக இயற்கை மருத்துவத் துறையில் அவரது குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

அவரது மருந்து இல்லா சிகிச்சை முறை மற்றும் அவர் நிறுவிய ஜிண்டால் நேச்சர்க்யூர் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் காரணமாக அவருக்கு இந்த மதிப்பிற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஹரியானாவில் உள்ள தொலைதூர கிராமமான நல்வாவில் 1932–ம் ஆண்டு பிறந்த டாக்டர் ஜிண்டாலின் இயற்கை மருத்துவம் நோக்கிய பயணம் அவரது பல்கலைக்கழக ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்ட வயிற்றுக் காசநோய் காரணமாகத் துவங்கியது. அந்த நோயைக் குணப்படுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் ஒரு சிறிய இயற்கை மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு உண்ணாவிரதம், எனிமா எடுத்தல் மற்றும் பிற வழக்கத்திற்கு மாறான சிகிச்சை முறைகள் மூலம் அவர் அந்த நோயிலிருந்து விடுபட்டார். இந்த அனுபவம்  அவருக்கு இயற்கை சிகிச்சை மற்றும் யோகா மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஒரு விரிவான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவமனையை நிறுவுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், டாக்டர் ஜிண்டால் கடந்த 1977-79ல் பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் பரந்த அளவிலான நிலத்தை வாங்கி ஜிண்டால் நேச்சர்க்யூர் இன்ஸ்டிடியூட்டை துவக்கினார்.

இது இயற்கை மருத்துவத்தை புதிய உயரங்களுக்கு உயர்த்துவதில் டாக்டர் ஜிண்டாலின் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது. இதற்கான நிதி உதவியை ஜிண்டால் அலுமினியம் நிறுவனம் வழங்கி உள்ளது. அந்த நேரத்தில் நடைமுறையிலிருந்த வழக்கமான இயற்கை சிகிச்சை முறைகளுக்கு முற்றிலும் மாறாக, ஜிண்டால் இதை நவீனமயமாக்குவதற்கும் புதுமைப்படுத்துவதற்குமான பணியைத் தொடங்கினார்.

மரபுவழி இயற்கை சிகிச்சை முறையில் மக்களிடையே அதிக விருப்பமின்மை மற்றும் அதில் நிலவும் பற்றாக்குறையை உணர்ந்து, மருந்து இல்லாத சிகிச்சை முறையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினார். 1969-ல் துவக்கப்பட்ட எஸ்ஜெ அறக்கட்டளை, அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது. மேலும் அரசு அல்லது பிற தனிநபர்களிடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறாமல் அதற்கான முழு நிதியையும் ஜிண்டால் அலுமினியம் வழங்கியது.

இவரின் அயராத முயற்சியின் காரணமாக, மருந்து இல்லாத சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்துமா, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையாக ஜிண்டால் நேச்சர்க்யூர் இன்ஸ்டிடியூட் திகழ்கிறது.

550 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ள இம்மருத்துவமனை, தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்து இல்லாத மாற்று வழிகளைத் தேடுபவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.

இது தவிர டாக்டர் ஜிண்டால் சமூக சீர்திருத்தத்திற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், எண்ணற்ற சமூகத் தொண்டுகளையும் செய்து வருகிறார். அலோபதி மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவுதல், கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகள், சுகாதாரம் மற்றும் கல்விக்காகக் கிராமங்களைத் தத்தெடுத்தல், மற்றும் சுகாதார மற்றும் கல்வியில் அயராது உழைக்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது சமூகத் தொண்டானது இயற்கை மருத்துவத்தையும் கடந்து, அவரது சொந்த கிராமமான நல்வாவில் 8 தொண்டு நிறுவனங்களை நிறுவி, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.