புலியகுளத்தில் ஐவர் கால்பந்து போட்டி – வீரர்கள் அசத்தல்

புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.  அதன்படி இந்த ஆண்டிற்கான  போட்டிகள் புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் நடந்தது.

இதில் 14, 17 வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 14 வயது பிரிவில் 12 அணிகள், 17 வயது பிரிவில் 26 அணிகள் மற்றும் ஓபன் பிரிவில் 32 அணிகள் பங்கேற்றன.

இப்போட்டியில், 14 வயது பிரிவில், கேரளா பிளையர் பீட் கால்பந்து கிளப் அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் கோவை பிரைடு கால்பந்து கிளப் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.  17 வயது பிரிவில், தஞ்சாவூர் மரடோனா கால்பந்து கிளப் அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் சென்னை ஜேப்பியார் பள்ளி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

ஆண்கள் ஓபன் பிரிவில், கேரளா அக்வா சப் அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் சென்னை ஜேப்பியார் பல்கலை அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச்சென்றது.

ஓபன் பிரிவில் முதல் பரிசாக ரூ. 75 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம்; 17 வயது பிரிவில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 10 ஆயிரம், 14 வயது பிரிவில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதில் முன்னதாக சிறப்பு விருந்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், வெற்றியாளர்களுக்குக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதனையடுத்து,  துணை ஆணையர் சரவணகுமார் வெற்றியாளர்களுக்குக் கேடயங்கள் மற்றும் காசோலைகளை வழங்க, எம்.கே குரூப்ஸ் இயக்குநர் மணிகண்டன் பரிசுகளை வழங்கினார்.