‘அஞ்ச வேண்டாம்’ எனது நேரடி கட்டுப்பாட்டில் ஐடி-விங்

அதிமுக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக ராஜ் சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்டம் மற்றும் மண்டலம் வாரியாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஐடி பிரிவினர் எதற்கும் அஞ்ச வேண்டாம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதிமுக ஐடி பிரிவினர் எதற்காகவும், யாருக்காகவும் அஞ்ச வேண்டாம். திமுக அரசு செய்யும் தவறுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று பேசினார்.

மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகச் செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதைக் குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்கக் கூடாது அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்றார்.