டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள்

ஜப்பான் நாட்டில் ஹஹோடட்டே கடற்கரையில் ஆயிரம் டன் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருப்பது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் நாட்டின் வடக்கு ஜப்பான் கடற்கரையில் சுமார் ஆயிரம் டன் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி வகையை சார்ந்த மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது. இது குறித்து ஹகோடேட் மீன்வள ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர் தகாஷி புஜியோகா பேசிகையில், இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி முன்பு கேள்விப்பட்டதாகவும், ஆனால் பார்ப்பது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார். மேலும், இந்த மீன்கள் கூட்டத்தை எதாவது பெரிய மீன்கள் துரத்தி வந்திருக்கும் மேலும், அதனிடம் இருந்து தப்பிக்கும் போது இட நெருக்கடி காரணமாக இறந்திருக்கலாம் அல்லது வெப்பமான நீர் பரப்பில் இருந்து குளிர்ந்த நீர் பரப்பிற்கு இடம்பெயர்ந்த காரணத்தாலும் இறந்திருக்கக் கூடும் என்று கருதுவதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், வல்லுநர்கள் சில காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது, புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கடலில் வெளியேற்றப்பட்ட கழிவு நீர் காரணமாகவும் மீன்கள் இறந்திருக்கலாம் என யூகிக்கின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் சேகரித்த 1.34 மில்லியன் டன் கழிவுநீரில் சிலவற்றை அண்மையில் பசிபிக் பகுதிக்குள் ஜப்பான் வெளியேற்றத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.