மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்டும் வகையில் சேரிட்டி டோரன்மென்ட்

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் “புரோ வி 24” அணி 18 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது.

கடந்த 57 ஆண்டுகளாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் “செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை” கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிகிச்சை, பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள 66 ஆயிரம் மாற்றுதிறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் வகையில் “செஷாயர் மாற்றுத்திறனாளி அறக்கட்டளை” மற்றும் கோயம்புத்தூர் கோல்ப் கிளப் இணைந்து நடத்திய “சேரிட்டி டோரன்மென்ட் “ என்ற பெயரில் கோல்ப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 96 பேர் 4 அணிகளாக கலந்து கொண்டனர். இதில் “புரோ வி 24” அணி 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது. டஸ்காட்டிக்ஸ் அணி 18 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது.

இது குறித்து அறக்கட்டளை தலைவர் தனலட்சுமி கூறுகையில், மாற்றுத்திறனாளிகளில் குறிப்பாக முதுகுத்தண்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நாற்காலிகள் சிகிச்சை என அனைத்து இலவசமாக செய்து வருகிறோம். கோல்ப் கிளப் உறுப்பினர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்கள், கல்வி நிறுவன தலைவர்கள் போன்றோர் வருவதால் அவரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செய்து வரும் சேவைகள் குறித்தும், அவர்கள் மூலம் உதவி தேவைப்படும் மாற்றுதிறனாளையும் கண்டறிய இந்த போட்டியை முதல் முறையாக கோவையில் நடத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த போட்டிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பணிகளுக்கு நிதி திரட்டுவதாகவும் இதே போல ஒவ்வொரு ஆண்டும் சேரிட்டி கோப்பை கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.