குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு; புதுவித முயற்சியில் தென் கொரியா

தென் கொரியாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தர ஆய்வில் உலகிலேயே குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதம் கொண்ட நாடாக தென்கொரிய அறியப்பட்டது. மேலும், தென்கொரியாவில் திருமணங்கள் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்து வருவதாக செய்திகளும் வெளியாகின. இதன் காரணமாகவும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாக கூறப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்பதாகவும் அறிவித்தது.  இருப்பினும், திருமணங்கள் செய்பவர்களின் எண்ணிக்கையும், குழந்தைகள் பிறப்பு விகிதமும் அதிகரிக்கவில்லை. இந்த நிலையில், தென் கொரிய அரசாங்கம் புதுவித முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது, பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. நட்சத்திர விடுதி ஒன்றில் “பிளைண்டு டேட்டிங்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது, அதில் தங்களுக்கு ஏற்ற துணையைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பெரும்பாலானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின்  மூலம் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என அரசாங்கம் நம்புவதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், இவ்வகை நடவடிக்கைகளால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது என்றும் மேலும் பல திட்டங்கள் அறிவித்து அதனை செயல்முறை படுத்தினால் மட்டுமே பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்ற கருத்தும் பரவலாக எழுந்து வருகிறது.