மிதிலி: 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 

வங்க கடலில் மிதிலி  புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால்  தமிழ்நாட்டில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று நவம்பர் 17 ஆம் தேதி புயலாக மாறவுள்ளது. மேலும்,  நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை  அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகர்ந்து மோங்லா-கேப்புபாராவு பகுதிகளுக்கு இடையே கடக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மாலத்தீவின் பரிந்துரைப்படி இந்த புயலுக்கு “மிதிலி” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாகக் காற்று வேகம் அதிகரித்து வருவதால்  தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வடமேற்கு- வடகிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா கடலோரம், மேற்கு வங்கம், வங்கதேச கடலோரம், இலங்கை கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.