எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்லூரி வாழ்க்கை

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்  கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் தேசிய இளைஞர் விழாவிற்கான மாவட்ட அளவிலான தேர்வு நிகழ்ச்சி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பவானீஸ்வரி, ஐ.பி.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வினைக் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்துப் பேசுகையில், போட்டிகள், நம்முடைய திறமைகளை வளர்ப்பதற்கும்,  போட்டியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கும் உதவுகிறது.  திறன்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்பது மிக முக்கியம். திறன்களை வளர்த்துக் கொண்டால் எல்லாத் துறைகளிலும் சாதிக்கலாம். நல்ல பழக்கவழக்கங்கள் தொடர்ந்து இருந்தால் அது நம்முடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

நல்ல பழக்கவழக்கங்களைப் போலவே கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் அது நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து எல்லாருமே விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகம் வளர்ச்சி அடையும். கல்லூரி வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமானது. எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற முக்கியமான காலகட்டம் இதுதான். எனவே, இங்கு படிக்கும் காலத்தில் உங்கள் திறன்களை சரியாக வளர்ந்து கொள்ளுங்கள். கல்வியால் தான் வாழ்க்கையில் பெரிய உயரங்களைத் தொட முடியும் என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அதைத் தொடர்ந்து அண்மையில் திருச்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவிற்கான முன் அணிவகுப்பு முகாமில் தமிழ்நாடு சார்பில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி மற்றும் மாணவி பவ்யா ஆகியோர் பங்கேற்றதைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் சிவக்குமார் வரவேற்றார். மேலும், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் ஆர்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.