வேளாண்மையில் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு முக்கியம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் “வேளாண் மேலாண்மை அமைப்பில் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பரவல்: நிலையான எதிர்காலத்திற்கான நோக்கம்” என்ற தலைப்பில் கல்லூரியின் மெக்கட்ரானிக்ஸ் துறை சார்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் முதலாவதாக வேளாண்மையில் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளைப் பற்றி ஏபிபி இந்தியா நிறுவனத்தை சார்ந்த ஜான் இக்னாடஸ் மற்றும் சித்தார்த் ஆகியோர் விளக்கினர்.அடுத்ததாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வனிதா வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு பொருந்திய புவிசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து புல் மெஷின்ஸ், அக்ரிஈஸி, மற்றும் மாயா கிரீன்ஸ்  நிறுவனங்கள் சார்பாகப் பூச்சிக்கொல்லி தெளிக்கும் ட்ரோன்கள், தானியங்கி களையெடுத்தல் கருவி, டிராக்டர் இணைப்புகள் மற்றும் பிற தானியங்கி இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு நேரடியாகப் பயன்படுத்திக் காட்டப்பட்டது. அதோடு பல்வேறு வேளாண் தொழில்நுட்ப விற்பனையகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் ஐஐடி சென்னை பேராசிரியர் அசோகன் வேளாண் மேலாண்மை அமைப்பில் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்துப் பேசினார். மாயா கிரீன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அருள் கிருஷ்ணஸ்வாமி தானியங்கி கருவிகளின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். இன்றைய காலகட்டத்தில் வேளாண் துறை சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் அறியும்வகையில் இந்த கருத்தரங்கு அமைந்திருந்தது.