உடல் உறுப்பு தானம் செய்வதிலும் பெண்களே முன்னிலை

இந்தியாவில் ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக, நம்மில் பலருக்கும் உறுப்பு தானம் செய்வதில் ஆண்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்ற  கருத்து பரவலாக உள்ளது. இது முற்றிலும் தவறான கருத்து என சமீபத்திய ஆய்வறிக்கை தகர்த்துவிட்டது.

மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் நோட்டோ எனப்படும் தேசிய உடல் உறுப்பு தான அமைப்பு அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 1995 ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான தரவுகளின் 36,640 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 29,000 பேர் ஆண்கள், 6,945 பேர் பெண்கள் ஆவர்.  இதில், உறுப்பு தானம் செய்பவர்களில் 5 பேரில் 4 பேர் பெண்கள், உறுப்பு தானம் பெறுபவர்களின் 5 பேரில் 4 பேர் ஆண்கள்.   2019- ஆம் ஆண்டு மட்டும் உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் 80% பேர் பெண்கள் என்றும், உடல் உறுப்பு பெற்றுக் கொண்டவர்களில் 80% பேர் ஆண்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகா  மாநிலத்தில் உடல் உறுப்பு மற்றும் திசு தானம்  6.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.