தீபாவளி பண்டிகை: கோவையிலிருந்து பேருந்து புறப்படும் இடம் தற்காலிக மாற்றம் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கோவையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வருகின்ற 12ஆம் ஞாற்றுக்கிழமை தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்வர். எனவே பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்கள்  அலைமோதும். ஆகையால் போதிய போக்குவரத்து வசதிகள் வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக பண்டிகை நெருங்கும் வேளையில் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடும். அந்த வகையில் இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க பின்வரும் பேருந்து நிலைய மாற்றங்கள் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிங்காநல்லூர் பேருந்து நிலையம்:

மதுரை, தேனீ, மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

சூலூர் பேருந்து நிலையம்: 

கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

மத்திய பேருந்து நிலையம்:

சேலம்,திருப்பூர், ஈரோடு, ஆனைக்கட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோவை மத்திய பேருந்து  நிலையத்திலிருந்து (காந்திபுரம்) இயக்கப்படவுள்ளன.

புதிய பேருந்து நிலையம்:

மேட்டுப்பாளையம் சாலை -ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

மேற்கூறிய தற்காலிக ஏற்பாடானது 09.11.2023.முதல் 11.11.2023 வரை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் பொது மக்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களுக்குச் சிறப்பு பேருந்து வசதியும்  இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை-மதுரை செல்லும் பயணிகளுக்கு 100 பேருந்துகளும், கோவை-திருச்சி செல்லும் பயணிகளுக்கு 80 பேருந்துகளும், கோவை-தேனி  செல்லும் பயணிகளுக்கு 50 பேருந்துகளும், கோவை-சேலம் செல்லும் பயணிகளுக்கு 60 பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் செல்ல காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதிகளைப் பொதுமக்கள் அனைவரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தீபாவளியை ஒட்டி கோவையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் சிரமமின்றி செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.