தமிழகத்தில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்!

தமிழகத்தில் டெங்குகாய்ச்சலின் பாதிப்பைத் தடுக்கும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 10,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் ஹெல்த் வாக் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று அதற்கான ஆய்வுப் பணிகளை  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கி அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நோய் பாதிப்புகளான டெங்கு, மலேரியா, தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகள் இச்சமயத்தில்  அதிகரிக்க கூடும். இதனைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வருகின்ற அக்டோபர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும்  மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். தமிழகத்தில் அடுத்த 10 வாரங்களில் பத்தாயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை., என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.