பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடையாளம்!

தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் பேச்சு!!

பிஷப் அப்பாசாமி கல்வியில் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவின் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், இலக்கியம் என்பது ஒரு இனம் தன் அடையாளத்தையும் பண்பாட்டையும் மட்டுமல்ல வரலாற்றையும் தெரிந்து கொள்ள உதவுகின்றது. மனித வரலாற்றைக் கற்பனையான கதைகளின் மூலம் கட்டமைக்க முடியாது. ஆனால், தமிழ் இலக்கியம் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பை உறுதியூட்டுகிறது.
வெவ்வேறு மொழிகள் பேசும், பல இன மக்கள் வாழும் நகரத்தை ‘காஸ்மோபாலிட்டன்’ நகரம் என்று இப்போது சொல்லுகிறோம். ஆனால், சங்க பாடல் “மொழிபல பெருகிய பழிதீர் தேயத்து புலம்பெயர் மாக்கள் கலந்திசைத் துறையும் முட்டாச்சிறப்பிற் பட்டினம்” என்று கூறுகிறது. இதுவே தமிழரின் அடையாளம். இந்த பன்முகத்தன்மை தான் இந்தியாவின் உண்மையான அடையாளம். அந்த ஒற்றுமை உணர்வை காப்பாற்ற வேண்டும்.

மேலும், கல்வி தான் மனிதர்களுக்கு முன்னேற்றத்தையும் சுயமரியாதையையும் ஏற்படுத்துகிறது. உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த திருக்குறள் நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வழிகாட்டுகிறது. ஒருவரிடம் இருந்து சிறிய உதவி பெற்றாலும் அந்த உதவியை எப்போதும் மனிதர்கள் மறக்கக்கூடாது. அன்பு தான் மனித வாழ்வின் அடிப்படை ஆகும். பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தாத ஒருவர் வாழும் மனிதர்கள் அல்ல வெறும் எலும்புகள் போர்த்திய உடம்பை கொண்டவர்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

எந்த முயற்சியும் செய்யாமல் முடங்கி இருக்கும் சோம்பேறிகளால் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது. முடங்கிக் கிடந்து குகையில் வாழ்ந்த மனிதன் நடக்கத் தொடங்கிய பிறகுதான் நாகரீகம் பிறந்தது.
தொடர்ந்து முயற்சி செய்யவும் உழைக்கவும் தயாராக இருக்கும் மனிதர்கள் மட்டுமே தாங்களும் உயர்ந்து பிறரையும் உயர்த்த வழிகாட்டுவார்கள்.

வருங்காலத்தில் நமது நாட்டை வழிநடத்த உள்ள மாணவர்களிடம் பிறர் மீது அன்பு செலுத்தும் பண்பையும், பிறருக்கு உதவி செய்யும் குணத்தையும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும். ஏமாற்றிப் பெரும் வெற்றியை விட தோல்வி மேலானது என்கிற உன்னத உணர்வையும், சமூகத்தின் அவலங்களைக் கண்டு கொதித்தெழும் துணிச்சலையும் மாணவர்கள் பெறுவதற்கு ஆசிரியர்கள் வழி காட்ட வேண்டும்., என கூறினார்.

இவ்விழாவில் மாணவர்களின், ஒயிலாட்டம், பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக கல்லூரியின் செயலாளர் ராஜன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார் ,சற்றும் கல்லூரியின் முதல்வர் கெத்சி வாழ்த்துரை வழங்கினார்.