சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உயர்ந்த குறிக்கோள் அவசியம் – கே.பி.ராமசாமி.

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி  கல்லூரியில் மாணவர்க் குழுவின் சார்பாக, “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ” திரைப்பட உயர்வூக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு கே.பி.ஆர். கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமையேற்று, “பல துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் முதலில் அதற்கான உயர்ந்த குறிக்கோளை உருவாக்கிடல் வேண்டும்” என எடுத்துரைத்தார். கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த்கிருஷ்ணன் கலந்துகொண்டு, சமூகத்தின் நவீனத்துவ மாற்றத்திற்கு உதவும் புதுமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு செயலாற்றுவது மிக அடிப்படையானது என்பதை வலியுறுத்தினார்.

தொடர்ந்து,  கல்லூரிச் செயலர் காயத்ரி ஆனந்த் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர்  கீதா முன்னிலை வகித்து, இளைய தலைமுறையினரின் வளர்ச்சிப்போக்கில் தொழிற்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள் தற்காலத்தில் அளப்பரியதாக இருக்கிறது. பல துறைசார்ந்த நுட்பமான அறிவுப்புலப்பாட்டை மாணவர்கள் பெற்றிருத்தல் அவசியமானது. கலைத்துறையில் புதுமைகளைப் புகுத்தித் தன்னைச் சாதனையாளனாக இளைஞர்கள் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக, “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான பிரதீப்குமார் கலந்துகொண்டார். அவர்கள் உரையாற்றுகையில், இத்திரைப்படம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு உண்டான நற்கருத்துகளை எடுத்துரைப்பதோடு, மக்களிடையே உயரிய கண்ணோட்டத்தை உருவாக்கும் சிறப்பினைக் கொண்டதாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இதில்  இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.