மாணவிகளுடன் மகளிர் காவலர்களை இணைக்கும் பாலம்!

கல்விக்கு தலைசிறந்த மாவட்டமாக விளங்கும் கோவையில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பட்டப்படிப்புக்காக டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் வருகின்றனர். இதுமட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பலபேர் இங்கு தங்கி கல்வி கற்கின்றனர்.

இத்தகைய சூழலில் மாணவிகளுக்கு பாலியல்  ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சில சீண்டல்கள் ஏற்பட  வாய்ப்புள்ளது. எதிர்பாராமல் சிலந்தி வலையில் சிக்கி சின்னாபின்னமாகி விடும் நிலையில் உள்ளது.  இவ்வாறான சமயங்களில் பெரும்பாலான மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கல்லூரி நிர்வாகத்திடமோ, பெற்றோரிடமோ வெளிப்படுத்த முடியாமல் அவதிக்குளாகின்றனர். இதில், சிலர் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இப்போதைய நிலையில் தங்கள் சொந்த ஊரிலேயே பெண்களால் இரவு நேரத்தில் அச்சப்படாமல் நடமாட முடியாத நிலைதான். வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து தங்குபவருக்கு பிரச்னைகள் வராது என்பதற்கு என்ன நிச்சயம் ?

பெருநகரங்களில் நகை பறிப்பு, பண பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்கிறது. பாலியல் வன்கொடுமைகள் நீண்டுகொண்டே போகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கோவை காவல்துறையினர் கொண்டு வந்த திட்டம்தான்  ‘போலீஸ் அக்கா’ திட்டம்.

அது என்ன போலீஸ் அக்கா திட்டம் ?

தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாநகரத்தில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம்,   கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த போலீஸ் அக்கா திட்டம்.

 

இந்த திட்டத்தின் கீழ் கோவையில் செயல்படும் கல்லூரிகளுக்கு தலா ஒரு மகளிர் காவலர் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் காவலர்கள் தங்கள் எல்லைக்குள் உட்பட்ட கல்லூரிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மாணவிகளிடம் கலந்துரையாடுவர். மேலும், தங்கள் தொலைபேசி எண்களை பகிர்ந்து கொள்ளும் அவர்களிடம் மாணவிகள் தங்களது பிரச்னைகளை வெளிப்படையாக பேசுவதற்காக இணக்கமான சுழலை உருவாக்குவர்.

மாணவிகளுடன் காவலர்கள் அணுகும் இந்த முறையால் தங்களது பிரச்னைகளை வெளிப்படையாக தெரிவிப்பதோடு பிரச்னைக்கு முடிவு ஏற்படும். இந்த திட்டத்தின் மூலம் பல மாணவிகள் பலனடைந்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

போலீஸ் அக்கா திட்டத்தின் செயல்முறைகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட செல்வபுரம் காவல்நிலையத்தின் பெண் தலைமை காவலர் பெத்தனாச்சி.,“மாணவிகள் பயத்தினால் தங்களுக்கு சேரும் இடர்பாடுகளை பிறரிடம் சொல்லாமல் மூடி மறைக்கின்றனர். அவர்களுக்கு இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாதம் இருமுறை காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் பேசுவோம். மாணவிகள் நேரில் சொல்ல தயங்கினாலும் அலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்த்து கொள்கிறார்கள். அவர்களின்  விருப்பத்தை பொறுத்து பெற்றோரிடம் தெரிவிப்போம். இந்த திட்டத்தினால் மாணவிகள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது.

ஆன்லைன் வாயிலாக நடக்கும் பணமோசடி குறித்துதான் பெரும்பாலான மாணவிகள் புகார் கூறுகின்றனர். இதைதவிர புகைப்படங்களை காட்டி மிரட்டுவது உள்ளிட்ட பாலியல் தொந்தரவுகள் பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்து வருகிறோம்.

போலீஸ் அக்கா திட்டத்தின் வழியாக நாங்கள் ஒரு சகோதரியைப் போல் நடந்துகொள்வதால் மாணவிகள் வெளிப்படையாக பேசுகின்றனர். இதனால், மாணவிகள் எவ்வித கவனச்சிதறல்கள் இன்றி கல்வியில் கவனம் செலுத்த முடிகிறது” என்று பேசினார்.