தென் மாவட்டத்தில் ஓர் சிறந்த சுற்றுலா கிராமம்!

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் இயற்கை சூழலை கொண்டு அமைந்துள்ள உல்லாடா கிராமம், மத்திய சுற்றுலா துறையால் “சிறந்த சுற்றுலா கிராமமாக” அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுற்றுலா கிராமங்களை கண்டறியும் வகையில், மத்திய அரசின் சார்பில் உள்ளுர் கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களை கவுரவப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 795 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, உல்லாடா கிராமத்தில் உள்ள மக்களின் கலாச்சாரம், உபசரிப்பு, மலை காய்கறி விவசாயம் , பாரம்பரிய நடனம், சுகாதாரம், கோவில் திருவிழா போன்றவற்றை மையப்படுத்தி விண்ணப்பிக்கப்பட்டது.

அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக உல்லாடா தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு :

உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 140 வீடுகளை கொண்டு சுமார் 720 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் சிறியதாக இருந்தாலும், கல்வி நிறுவனங்கள், வங்கி, மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் ஆகியவை உள்ளன. இங்கு அம்மன் கோவில் ஒன்றில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் ‘குண்டம்’ விழா நடைபெறும். அப்போது, படுகரின மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து நடமாடுவது உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கண்கவரும் விழாவாக காட்சியளிக்கிறது.

மேலும், குன்னூர் அருகாமையில் அமைந்துள்ள இந்த கிராமத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதரும் வகையில் தங்கும் விடுதிகளை மேம்படுத்த, நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அடுத்த முறை நீங்கள் ஊட்டி செல்லும் போது தவறாமல் உல்லாடா கிராமத்தின் அழகையும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் அனுபவிக்க மறந்துடாதீங்க…!