
கோவை மருதமலை முருகன் கோயிலில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் அக்டோபர் 5 முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துதள்ளது . இதனால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படுகிறது. பழமையும், பெருமையும் வாய்ந்த கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு கோவை மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதிலும் கிருத்திகை, சஷ்டி போன்ற முருகனுக்கான உகந்த நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவே இருக்கும்.
இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. வாகன நிறுத்தம், சாலை சீரமைப்பு, பக்தர்கள் வசதிக்காக தானியங்கி காத்திருப்பு அறை, கழிப்பறைகள், கட்டண சீட்டு வழங்கும் இடம், கருங்கல் தளம் அமைப்பு போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் ஒரு மாதத்திற்கு மலைப்பாதையில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு கோயில் பேருந்து மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்களின் கோரிக்கை :
இந்நிலையில், முருகனுக்குரிய முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா அடுத்த மாதம் வருகிறது.
சஷ்டி விழாவில் பங்கேற்கும் பல லட்சம் மக்கள் முருகனை தரிசிக்க வருவார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும், விழா காலங்களில் வாகன நெரிசல்களை தவிர்க்க கோயில் நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது. இருந்தபோதிலும் கந்த சஷ்டி விழா நெருங்குவதால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலைப் பணிகள் விரைந்து முடிக்காவிட்டால் சஷ்டியின் போது வாகனங்களை நிறுத்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர்கள். ஏற்கனவே, கோவை மாநகரில் மேம்பாலப்பணிகள், ஸ்மார்ட்சிட்டி உள்ளிட்ட பணிகளால் ஏற்படும் வாகன நெரிசல் மக்களை வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில், மருதமலையில் மேம்பாட்டு பணிகள் அவசியமான ஒன்றாக இருந்தாலும் அது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தாத வகையில் இருந்தால் நல்லது. இதற்கு தகுந்தவாறு சாலை சீரமைப்பு, வாகன நிறுத்தும் இடம் போன்ற கோயில் மேம்பாட்டு பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்பதே பக்தப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரது கோரிக்கையாக உள்ளது.