பருவகால நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் 

தமிழகத்தில் பருவம் தப்பிய வெயில் மற்றும் மழை  என காலநிலை மாற்றத்தினால்  வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவிவருகிறது. இதனால், சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்,  பணிக்கு செல்லும் ஊழியர்கள் எனப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அத்தகைய நோய் தொற்றினை தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி இங்கே காண்போம்.

காய்ச்சல் என்றாலே நம் உடலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்க் கிருமிகளால் தொற்றுகள் உருவாகி, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கிவிடும். குறிப்பாக, குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையினால் தான் நோய்க்கிருமிகள் அதிக அளவில் பரவுவதற்கான முக்கிய காரணமாகும். அச்சமயத்தில்  நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் வகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள மற்றும் எளிதில் ஜீரண சக்தியை உடைய உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்

பெரும்பாலான நோய்கள் நம்மை தாக்குவதற்கு முன்பாக நம் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், அதிக உடல் வெப்பநிலை (104 டிகிரி பாரன்ஹீட் வரை), தொண்டை வலி,அவ்வப்போது குளிர் தலைவலி,சோர்வு, தசை மற்றும் மூட்டு வலிகள், பசியின்மை,முகம் வீக்கம், கண் எரிச்சல் போன்றவை  வைரஸ் காய்ச்சலுக்கான சில பொதுவான அறிகுறிகள் ஆகும்.

தடுக்கும் வழிமுறைகள்:

கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும்:

வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் முதலில் கைகளை சுத்தமாக கழுவும் பழக்கத்தை அனைவரும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், எந்த உணவு பொருட்களை உண்பதற்கு முன்பாகவும் நம் கைகளை சோப் மற்றும் சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும். இது கிருமிகளினால் ஏற்படும் வைரஸ் நோய்களிடம் இருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது.

நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும்:

வைரஸ் தொற்றுநோய்  என்பது எளிதில் பரவக்கூடிய தொற்றாகும். எனவே நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து நேரடி தொடர்பை தவிர்த்துக் கொள்வது மிக அவசியமானது. மேலும்,  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களும் நோய்வாய்ப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏ

ஆரோக்கியமான உணவுமுறை:

வைரஸ் நோய்க்கிருமிகள் அதிக வெப்பநிலையில் உயிர்வாழ முடியாது, எனவே, ஈரப்பதமான சூழ்நிலையில் சூடான உணவுகள் உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.  இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் போன்ற ஆரோக்கியமான மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களைப் பயன்படுத்தி சூப்களை குடிப்பதால் எவ்வகையான வைரஸ் நோய்த் தொற்றிலிருந்தும்  நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வைட்டமின் சி நிறைந்த பழங்கள்:

 நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, புரோக்கோலி, மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி, நோய் தொற்றுக்கு எதிராகப் போராடவும் உதவுகிறது.

மேலும், தினமும் இரண்டு முறை வெந்நீரால் குளித்து சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். எனவே, மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதால் நோய் தொற்றிலிருந்து நம்மை தடுத்துக் கொள்ள முடிகிறது.