காடு, மலை பகுதியை சுற்றி மசினகுடிக்கு ஓர் பயணம்

சுற்றுலா என்றாலே கொங்கு மண்டல மக்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். ஏனென்றால், இவ்விடத்தில் தான் மனதிற்கு இதமாகவும், குளிர்ச்சியான இயற்கை சுழலும் கொண்டு நிறைந்துள்ளது. அப்படி, சுற்றுலா அனுபவத்தை காடுகள் வழியில் பயணிக்க விரும்புவோர் தவறாமல் மசினகுடி சென்று வாருங்கள். அங்குள்ள சிறப்பான இடங்களை குறித்து காணலாம்.

எப்படி செல்வது? 

ஊட்டியிலிருந்து 30 கி.மீ  தொலைவிலும், முதுமலையிலிருந்து 75 கி.மீ தொலைவில் மசினகுடி பகுதியை சென்று விடலாம். தமிழகத்தில் எங்கிருந்தும் ஊட்டி சென்றால்,  எளிதில் மசினகுடியை அடைந்து விடலாம்.

சுவாரசியமான ஜங்கிள் சவாரி

மசினகுடி சென்றவுடன் முக்கியமாக முதலில் ஜங்கிள் சவாரி செல்ல மறந்து விடாதீர்கள். மொத்தக் காடுகளின் அழகையும், புள்ளி மான்கள், சிங்கவால் குரங்குகள், பறவைகள் இந்த ஜங்கிள் சவாரியில் கண்டு ரசிக்கலாம். காலை 6.30 – 8.30 வரையிலும், மாலை 3 – 6 வரையிலும்  சவாரி செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதற்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காடுகள், மலைகள் நிறைந்த இவ்விடத்தில் தகுந்த பாதுகாப்புகளுடன் ட்ரெக்கிங் செல்வதற்கும் உரியதாக இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் சிறிதும் மாசுபடாத இடங்களில் இதுவும் ஒன்று.

யானை பிரியர்களுக்கான இடம் 

மசினகுடியில், மற்றொரு முக்கிய இடமாக தெப்பாக்காடு யானைகள் முகாம் உள்ளது. யானை பிரியர்களுக்கு மிகவும் பரவசமூட்டும்  இடமான இங்கு யானைகள் குளிப்பது, உணவருந்துவது, பயிற்சி செய்வது ஆகியவற்றை பார்த்து ரசிக்க முடியும். மேலும் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடமாக விளங்குகிறது. இந்த யானைகள் முகாம் தமிழ்நாடு வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மோயார் ஆறு

மசினகுடியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் மோயார் ஆறு உள்ளது. இது பவானி ஆற்றின் துணை நதியாகும். நீலகிரியில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்றான இங்கு இயற்கையோடு  படகு சவாரி செய்வது மனதிற்கு இன்பத்தை அளித்து கண்களை குளிர வைக்கின்றன.

மேலும், மரவகண்டி அணை, தேயிலை தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோவில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களையும் சுற்றி பார்க்கலாம்.