இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டின், இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்  நிகழ்ச்சி மற்றும் வகுப்புகள் தொடக்க விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் செயலாளர் பிரியா சதிஷ்பிரபு  குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். அவர் பேசுகையில், சிறந்த ஆற்றல் மிக்க அறிவில் சிறந்த மாணவர்களை உருவாக்கி அதன் மூலம் தொழில்நுட்பத்தில் சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் இந்துஸ்தான் கல்லாரி மாணவர்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் பேசுகையில், மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக மட்டும் அல்லாமல் சிறந்த பொறியாளர் ஆக வர வேண்டும் என்றும், மனிதநேயமிக்க பொறியாளராக விளங்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயா பேசுகையில், சிறந்த பொறியாளர்களை உருவாக்க இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி முனைப்புடன் செயல்படுகிறது என்றும் பேராசிரியர்கள் அதற்குத் துணை புரிகிறார்கள் என்றும் கூறினார் மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் நடராஜன், கல்லூரியில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய  விதிமுறைகள் மற்றும் பொறியியல் துறையில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு துறைத் தலைவர்களும் தங்களது துறை சார்ந்த பயிலரங்கம், உபகரணங்கள், கற்பித்தல் முறை, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறமை, புத்தகம் வெளியீடு, காப்புரிமை மற்றும் மேற்படிப்பு , உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அமைந்துள்ள வேலைவாய்ப்புகள் மாணவர்கள் வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் சேர்ந்த நிறுவனங்களைப் பற்றி எடுத்துக்கூறி தங்களது துறை மாணவர்களை வரவேற்றார்கள்.

கல்லூரி வளாகத்தில் AICTE  நிதி உதவியுடன் அமைந்துள்ள IDEA ஆய்வகத்தின் மூலம் மெகட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் உருவாக்கிய ஹுமனாய்ட் ரோபோ (இயந்திர மனிதன்) சரசுவதி கண்ணையன் கையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன் விழாவுக்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றது.

இதில் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு, முதன்மை நிர்வாக அதிகாரி கருணாகரன், முதல்வர்கள் ஜெயா, நடராஜன், அகாடெமிக்ஸ் டீன் மகுடீஸ்வரன் , டீன் மாணவர்கள் நலம் அனந்தமூர்த்தி,டீன் ஆராய்ச்சி மற்றும் அடைகாத்தல் சிவா மற்றும் இரண்டு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் புதிய மாணவ,  மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.