விநாயகர் சதுர்த்தியும் அதன் வரலாறும்

விநாயகர் சதுர்த்தி :

தீபாவளிக்கு அடுத்து இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என் றால் அது விநாயகர் சதுர்த்தி தான். விநாயகர் அவதரித்த தினத்தை தான் விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

விநாயகர் சதுர்த்தியில் தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படும். அப்படி நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்பு அந்த விநாயகர் சிலை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவில் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படும்.

விநாயகர் சதுர்த்தி வரலாறு :

மராட்டிய பகுதியை ஆண்ட மாமன்னன் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் தான் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட ஆரம்பித்தனர்.  விநாயகர் சதுர்த்தி என்பது மராட்டிய பகுதியின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும்  கொண்டாடப்பட்டது. ஆகவேதான் தான் இன்றும் மகாரஷ்ட்ராவில் இந்த விழா முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. சத்திரபதி சிவாஜியை தொடர்ந்து, பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து சுதந்திர போராட்டக் காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான,  “இந்திய அமைதியின் தந்தை” என்று அழைக்கப்படும் பாலகங்காதர திலகர் தான் ஒரு தனிப்பட்ட, உள்நாட்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தை ஒரு பெரிய நிகழ்வாக மாற்றுவதற்கு காரணமாக இருந்தார். அவர்  இந்த மராட்டிய தேசிய விழாவை, அதன் எல்லை தாண்டி பரப்பினார்.

பாலகங்காதர திலகர் 1893 ஆம் ஆண்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி என்ற விழாவை விமர்சையாக கொண்டாட வழிவகுத்தார். அவரது விருப்பப்படி  பூனாவில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த விநாயகர் சதுர்த்தியானது நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.