தனி மனிதரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேரை காப்பாற்ற முடியும்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் சார்பில் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு எஸ்.என்.ஆர். கலையரங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்புச் செயலர் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் பரதன் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்புரையாற்றிய கோபாலகிருஷ்ணன் “தற்போது மருத்துவத்துறை அதிவேகமாக வளர்ந்து வந்தாலும் கூட பெரிய தீர்வுகளை எட்ட முடியாத நிலையில் உள்ளோம். இதற்கு அடிப்படைக் காரணம் போதிய அளவு உடல் உறுப்பு தானம் இல்லாத நிலையே என்று குறிப்பிடலாம். இலட்சக்கணக்கோருக்கு உடல் உறுப்பு தேவை உள்ளது. ஆனால் இங்கு சில ஆயிரங்களில் மட்டுமே உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்குக் கிடைக்கின்றன.இது எண்ணிக்கை அளவில் பெரிய வேறுபாட்டில் உள்ளது. இதனை புரிந்து கொண்டு வருமுன் காப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு தனி மனிதரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் தான் நல்வழியை ஏற்படுத்த வேண்டும்” என்று உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை விளக்கினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா நிறுவனதின் 1000 க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துகொண்டனர். சீறுநரக ஆலோசகர் மற்றும் மருத்துவர் மது சங்கர் நன்றியுரை ஆற்றினார்.