ஜி.எஸ்.டி; தேவதையா? சாத்தானா?

அரசாங்கம் என்பது பொதுமக்களின் நன்மைக்காகவும்,  நல்வாழ்வுக்காகவும் உருவான ஒரு அமைப்பாகும். உலகம் தோன்றிய காலத்தில் இருந்து உருவான அரசமைப்புகளில் இப்பொழுது உள்ள ஜனநாயகம்தான் பரவாயில்லை என்கிற இரகம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.  நாம் தினசரி வெளிப்புறத்தே காணுகின்ற அடிப்படை பொது வசதிகளான சாலை அமைப்பு, குடிதண்ணீர், மருத்துவம், இராணுவம் உள்ளிட்டவை ஒரு அரசாங்கத்தால்தான் நிறைவு செய்ய முடியும். அதற்குத் தேவையான வருமானம் என்பது மக்களின் வரிப்பணத்தின் மூலமாகத்தான் வருகிறது. இந்த வரி வசூல் என்பது வரலாற்று காலம் தொட்டு பல வகைகளிலும் இருந்து வருகிறது.

இந்தியாவின் மிகப் பழமையான ராஜநீதி என்று போற்றப்படும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்கூட இந்த வரி வசூல் பற்றி குறிப்பிடுகிறது.  அது எப்படி என்றால்  பூவிலிருந்து வண்டு தேனை எடுப்பதுபோல, பூவுக்கும் சேதம் இல்லாமல் வண்டின் பசியும் ஆறுவதுபோல மக்களிடமிருந்து வரி வசூல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு வசூல் செய்த பணம் மக்களின்  பொது நன்மைக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

இன்றைக்கும் அதுவே மிகவும் அற்புதமான ராஜநீதி. அதற்குப்பின் பல நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. பின்னர் ஒவ்வொரு அரசாட்சி முறையாக, அதாவது கொடுங்கோலாட்சி, மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, பிரபு ஆட்சி என்று பல ஆட்சிகளைக் கண்ட பிறகு நாம் இன்று ஜனநாயக முறைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். ஆனாலும் வரி வசூல் செய்வதும் அதை மக்கள் நன்மைக்காக பயன்படுத்துவதும் அரசாங்கத்தின் கடமை என்ற நிலையிலிருந்து மாற்றமில்லை.  கூடவே வலுத்தவனுக்கு ஒரு நீதி, இளைத்தவனுக்கு ஒரு நீதி என்று பல ஓட்டைகளும் கசிவுகளும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற கடந்த 75  ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சட்டங்களில் ஒரு நல்ல முறையாக ஜிஎஸ்டி போற்றப்படுகிறது. பல்வேறு வகையான வரி விதிப்புகளை பல்வேறு மாநிலங்கள் கைக்கொண்டு வந்த வேளையில் மத்திய அரசுக்கு ஒரு வரி, மாநில அரசுக்கு ஒரு வரி என்று இருந்த காலகட்டத்தில் இருந்து தற்போது மாறி இருக்கிறோம்.

இன்று நாடு முழுவதும் ஒரே வரியாக கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ் எனும் பொருட்கள் மற்றும் சேவை வரி என்று ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் தற்போதைய டிஜிட்டல் முறை வந்த பிறகு இந்த ஜி.எஸ்.டி. வரி என்பது கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில் இதனை சில மாநிலங்களில் எதிர்த்தாலும் இன்று இந்த ஜிஎஸ்டி முறை என்பது பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டது. இன்னும் சரியாக சொல்லப்போனால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இந்த ஜி.எஸ்.டி. வரியில் உரிமைப்பங்கும் உண்டு.

இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இரண்டு மூன்று விதமான படிநிலைகள் இருக்கின்றன. தொடக்கத்தில் இந்த படிநிலைகள் குறித்து பெரிய விவாதங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. இன்னும் அவற்றில் சீரமைக்கப்படாமலே சிலவும் இருக்கின்றன. ஒரு காலத்தில் வடநாட்டில் இருக்கின்ற கோதுமை அரைப்பதற்கான ஆட்டா சக்கி என்கிற எந்திரத்திற்கு ஒரு விதமான வரி விதிப்பும், தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் அரிசி அரைக்கும் கிரைண்டருக்கு ஒருவகை வரிவிதிப்பும் இருந்தது. அதனை எதிர்த்து இங்கே இருந்த தொழில் அமைப்புகள் குரல் கொடுத்தபொழுது அதில் கொஞ்சம் மாற்றப்பட்டது. இவ்வாறு ஆங்காங்கே சில மாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

எப்பொழுதுமே சட்டம் என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துபவர்கள் அதிகாரிகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் மனதில் சட்டம் என்பது மக்களுக்காகத்தான் என்ற மனநிலை இருப்பதில்லை. நடைமுறைப்படுத்துவதில் உள்ள அவர்களுடைய தனிப்பட்ட முடிவு எடுக்கும் திறன் மக்களை மிகவும் பாதிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இந்த ஜி.எஸ்.டி. கண்காணிப்பில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. அப்படி இருக்கும்பொழுது ஜி.எஸ்.டி. நடைமுறை குறித்த சட்டங்கள் இன்னும் தெளிவாக மக்களையோ, வணிகர்களையோ, தொழில் சார்ந்த அமைப்புகளையோ, தொழில் செய்பவர்களையோ சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. அந்த நிலையில் இதுகுறித்த வழக்குகளையும் அதிகாரங்களையும் சரியாகப் பயன்படுத்த வேண்டியது ஜி.எஸ்.டி. துறை சார்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.

மேலும் ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அதுகுறித்த சட்டங்களை மிகத் தெளிவாகவும் தொடர்ந்தும் அவ்வப்போது ஏற்படும் மாறுதல் குறித்தும், சொல்லித் தர வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். சில இடங்களில் தெளிவாக இல்லாத சட்ட விதிகளை கையில் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் அதிகாரம் என்பது சிறிது அதிகமாகவே காணப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில் செய்பவர்கள் இந்த ஜி.எஸ்.டி. வரி என்கின்ற வரம்புக்கு உள்ளே வந்துவிட்டால் பிறகு அவர்கள் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்ற நிலைதான் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது வரி ஏய்ப்பு என்பதற்கு இடமே இல்லை. அதனால் இதுகுறித்த வழக்குகள் வரும்பொழுது அந்த வழக்குகளை சரியாக கையாண்டு வாடிக்கையாளருக்கு சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை.

ஒரு சாதாரண ஹோட்டலில் உணவு உண்பவனுக்குக்கூட இந்த ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை வசூலித்துத் தரவேண்டிய பணியைத்தான் அந்த ஹோட்டல் செய்கிறது. அந்த நிலையில் வரி செலுத்துபவர் என்பவர் பொதுமக்கள்தான். அப்பொழுது அந்த ஹோட்டல் உரிமையாளருக்கு இதில் எந்தவிதமான பாகுபாடு காட்டவும் வழியில்லை, தேவையும் இல்லை. அந்த ஓட்டலில் இருந்து இன்னொரு இடத்துக்கு  உணவு எடுத்துச் செல்லும்பொழுதோ, உணவு தயாரிப்பதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காக எடுத்துச் சொல்லப்படும்போதோ, அந்த உணவுக்கு ஒரு பில் இல்லை என்பதுபோல ஒரு சிக்கல் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறு ஒரு சட்டம் சார்ந்த குழப்பம் ஏற்படும்பொழுது அதனைத் தீர்த்து வைக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. அதை விடுத்து அதற்கு தண்டனை விதிப்பது என்பது தொடர்ந்து தொழில் செய்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.

நாடு தழுவிய வரி விதிப்பான ஜி.எஸ்.டி. என்பது நாட்டுக்கு மிகவும் தேவையானது என்பதில் யாருக்கும் எவ்விதமான ஐயமும் இல்லை. ஆனால் சாதாரண மக்கள் முதற்கொண்டு கட்டுகின்ற இந்த வரியை வசூல் செய்து நிர்வகிக்கின்ற அதிகாரிகள் என்பவர்கள் இதனைக் கட்டுகின்ற தொழில் அமைப்புகளை, தொழிலாளர்களை, நிறுவனங்களை சரியாக நடத்த வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.

தொடர்ந்து இதுகுறித்த அறிவுரைகளையும், புதிய சட்ட விதிகளையும், நடைமுறைகளையும் அந்தந்த தொழில் செய்பவருக்கு தெரிவிக்க வேண்டியதும், அதற்கான பயிற்சி முகாம்களையும் குறை தீர்க்கும் முகாம்களையும் நடத்த வேண்டியது ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் கடமையாகும். அதைவிடுத்து பொதுவாகவே தொழில் செய்பவர் என்றாலே ஏமாற்றுபவர் என்று ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்ப்பதும், தண்டனை விதித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டும் இருந்தால் அது நாட்டுக்கும் வரி வசூல் முறைக்கும் அழகு அல்ல.

சாதாரணமாக தொழில் செய்பவர் யாரும் வரியை ஏய்ப்பு செய்ய வேண்டும் என்பதற்காக தொழில் செய்வது இல்லை. அப்படி செய்தால், அது அவர்களுடைய மனநிலையையும் தொழிலையும்  கண்டிப்பாக பாதிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் அரசாங்க அதிகாரிகளின் நிலை அப்படியல்ல. அவர்களுக்கு பத்தோடு பதினொன்றாக இது ஒன்று. பொதுவாகவே அரசாங்க அலுவலகங்களில் அவர்களின் வாடிக்கையாளர்களாகிய பொதுமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது அவரவர் மனசாட்சிக்குத் தெரியும். அந்த வகையில் நாட்டுக்கு வருமானத்தை வழங்குகின்ற தொழில் செய்பவரின் குறைகளைத் தீர்க்க வேண்டியது ஜி.எஸ்.டி. துறை போன்ற அதிகாரிகளின் கடமையாகும்.

அதை விடுத்து அவர்கள் சிறுசிறு குறைகளை பூதக்கண்ணாடி வைத்து, பேனை பெருமாள் ஆக்குவது போன்ற பணிகளில் ஈடுபடுவது தொழில் செய்வோரின் மனநிலையை பாதிக்கும், அந்தத் தொழிலையும் பாதிக்கும்.

தொழில் என்ற ஒன்று இருந்தால்தான் வரி என்ற ஒன்று இருக்கும். வரி என்ற ஒன்று இருந்தால்தான் வசூல் செய்ய முடியும். அந்த வசூல் செய்வது என்பது இருந்தால்தான் நாட்டுக்கு நன்மையும் செய்ய முடியும். ஆக மொத்தம், அது தொழில் செய்வதில்தான் அடங்கி இருக்கிறது. எனவே தொழில்முனைவோர் தங்கள் தொழிலை இலகுவாக செய்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்தித்தர வேண்டிய முக்கியப் பங்கு அதிகாரிகளுக்கு உண்டு.

அதுவும் கோவை போன்ற சிறு தொழில்கள் செய்கின்ற பகுதிகளில் இந்த ஜி.எஸ்.டி. என்பது பலவிதங்களிலும் சிறு தொழில் செய்வதற்கு சிறு, சிறு தொல்லைகள் கொடுப்பதாகவே  இருந்து வருகிறது. இதுகுறித்த குறை தீர்ப்புக் கூட்டங்களையும், மனுநீதி நாட்களையும், மற்ற அறிவுரை கூறும் முகாம்களையும் நடத்த வேண்டியது ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் கடமை ஆகும்.

அதை விடுத்து, நானே ராஜா நானே மந்திரி, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அதிகாரிகள் நடக்க முற்படுவார்களானால், ஜி.எஸ்.டி. என்ற தேவதை, சாத்தானாக மாறி மக்களை பயமுறுத்துவதாக மாறிவிடும்!