
தனது பிறந்தநாளையொட்டி பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் எழுதிய உருக்கமான கடிதத்தில் பாமக, வன்னியர் சங்கம் உருவான வரலாறு, தமிழகத்துக்கு பாமக செய்துள்ள சமூக, அரசியல் பணிகள் உள்ளிட்டவற்றை விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், பொதுவாழ்வுப் பயணத்தில் அரசியல், சமூக நீதி, இனம், மொழி, இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்து என்னென்ன இலக்குகளையெல்லாம் நான் வரித்துக் கொண்டேனோ, அந்த இலக்குகளை எனது 44 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இன்னும் முழுமையாக என்னால் அடைய முடியவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?, இந்த வினா தான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. என்ற வாசகத்தை குறிப்பிட்டு தனது கனவு இன்னும் நனவாக இல்லையே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது அரசில் மீண்டும் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
1989 இல் பாமகவை தொடங்கி கடந்த 44 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியிருப்பது மிகப்பெரிய விஷயம்தான். அரசியல் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல், காலவெள்ளத்தில் கரைந்து போகாமல் இப்போதும் துடிப்புடன் அரசியலில் எதிர்நீச்சல் அடிக்க முடிகிறது என்றால் ராமதாஸிடம் இருக்கும் மனஉறுதி, கள சூழலை பார்த்து அரசியல் முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட தனித்திறன்கள்தான் காரணம்.
கட்சி தொடங்கியபின் 1989 பேரவைத் தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்தி காட்டிய ராமதாஸ், 1989 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாவிட்டாலும் 6 சதவீத வாக்குகளை பெற்று பாமகவை அரசியல் சக்தியாக நிலைநிறுத்தினார்.
தொடர்ந்து 1991இல் தனித்தும், 1996இல் வாழப்பாடி ராமதாஸ் தலைமையிலான ராஜுவ் காங்கிரஸுடன் கூட்டணியாக களம் இறங்கினாலும் தனது அடிப்படை வாக்கு வங்கியை பாமக இழக்கவில்லை.
1998 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக, பின்னர் 1999இல் திமுக என கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. 2001 பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக, 2004 மக்களவைத் தேர்தலில் திமுக, 2006 பேரவைத் தேர்தலில் திமுக, 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக, 2011 பேரவைத் தேர்தலில் திமுக என தொடர்ந்து கூட்டணி வியூகத்தை மாற்றியது பாமக. இருப்பினும், 1998 முதல் 2006 வரை பாமக அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெற்ற நிலையில், 2009 முதல் அந்த நிலை மாறியது. 2009 மக்களவைத் தேர்தல், 2011 பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் சறுக்கிய பாமக, 2014இல் பாமக, தேமுதிக, மதிமுக என தனி அணியை கட்டியபோதும், 2016 பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்டபோதும் சாதிக்க முடியவில்லை.
மீண்டும் அதிமுக கூட்டணியில் 2019 முதல் சேர்ந்தபோதும் மக்களவை, பேரவைத் தேர்தல்களில் பாமகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விடுபட்ட ஊரக உள்ளாட்சி, நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் தனித்து களம் கண்டபோதும் பாமகவால் வெற்றி வளையத்துக்குள் இதுவரை நுழைய முடியவில்லை.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி, 2026 பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி என்ற இலக்குடன் பயணித்து வருகிறது பாமக. பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக் கூட்டணி கூட்டத்துக்கு அன்புமணியை அனுப்பாமல் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியை அனுப்பிவைத்திருக்கிறார் ராமதாஸ்.
ராமதாஸ் தனது 44 ஆண்டு அரசியல் முதலில் தனித்து, பின்னர் கூட்டணி, மீண்டும் தனித்து, தொடர்ந்து கூட்டணி என 4 வகையான முடிவுகளை எடுத்திருக்கிறார். இப்போதும் கூட 2024இல் கூட்டணி, 2026இல் தனித்து என்ற இரட்டை நிலைப்பாட்டுடன் தான் பாமக பயணிக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடு தான் பாமகவின் மீதான நம்பகத்தன்மையை மக்களிடம் குறைக்கிறது.
2016இல் தனித்து போட்டியிட்ட பாமக தொடர்ந்து அதே நிலைப்பாட்டில் இருந்திருந்தால் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப்பின் அன்புமணியை முன்னிறுத்தி அதன் வாக்கு வங்கியை மேலும் உயர்த்தியிருக்கலாம். பாமக தலைமையில் கூட்டணி என்ற நிலையை உருவாக்கியிருக்கலாம்.
அதே காலகட்டத்தில் 2016இல் 1.1 சதவீத வாக்குகள பெற்ற சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தனித்து போட்டி என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் நின்றதால், 2019 மக்களவைத் தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளையும், 2021 பேரவைத் தேர்தலில் 6.85 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. 2024, 2026 ஆகிய தேர்தல்களிலும் தனித்து தான் என்ற உறுதியான அறிவிப்பை நாம் தமிழர் கட்சி வெளியிட்டு தொடர்ந்து களத்தில் இயங்கி வருவது இளம் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு தானாக விழுகிறது.
இதே உத்தியை பாமக கடைபிடித்திருந்தால் இப்போது இரட்டை இலக்கு வாக்கு வங்கியை தொட்டு இருக்க முடியும்.
2021 பேரவைத் தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்ததால் 23 இடங்களை ஒத்துக்கொண்ட பாமக தேர்தலில் 3.8 சதவீத வாக்குகளையே பெற்றது. தேர்தல் வரலாற்றிலேயே குறைவு. 7 தொகுதிகள் வெற்றிப்பெறாததால் மாநிலக் கட்சி அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
இதற்கு பிறகும் திமுக கூட்டணிக்குள் செல்லும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. எதிர்கட்சியான அதிமுகவும் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உள்ளாட்சிகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி நீடிக்கவில்லை. இப்போது பாஜக அழைப்பு விடுத்தும் அன்புமணியை அனுப்பாமல் ஏ.கே.மூர்த்தியை அனுப்பியுள்ளனர்.
அதிமுக – பாஜக கூட்டணி வடதமிழகத்தில் கடும் போட்டியை கொடுக்க பாமக தேவை. ராமதாஸ் பொருத்த வரை திமுகவில் இடம் இல்லை என்பதால் அதிமுக கூட்டணியில் முக்கியத்துவம் கிடைக்குமா அல்லது பாஜகவைவிட குறைந்த இடங்கள் ஒதுக்கப்படுமா என்ற அச்சத்தில் தான இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
ராமதாஸ் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது கேள்விக்குறிதான். வன்னியர்கள் மத்தியில் 40 சதவீத ஆதரவு உள்ளது. ஆனால், பிற சமூகத்தில ஆதரவு இல்லை. அதிகாரத்தில் நுழைவது கடினம்.
இரு திராவிட கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என 2016 இல் முழங்கி தனித்து போட்டியிட்டுவிட்டு மீண்டும் திராவிட கட்சிகளுடன் கூட்டணிக்கு தாவியது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் பாமகவின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுளளது.
2026 இல் மீண்டும் பாமக தலைமையில் ஆட்சி என்ற இலக்கை பாமக நிர்ணயம் செய்தாலும் தொடர்ந்து தனித்துப் போட்டி என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்குமா என்ற நடுநிலை வாக்காளர்களின் அவநம்பிக்கையை அன்புமணி ராமதாஸ் எப்படி களையப் போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாமக தொடங்கியப் பின்னர் உருவாகிய பின்னர் 5 சதவீத வாக்கு வங்கிக்குமேல் பெற்றிருந்த மூப்பனார் தலைமையிலான தமாகா, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, வைகோ தலைமையிலான மதிமுக ஆகியவை காலவெள்ளத்தில் கரைந்து நிற்கின்றன. ஆனால், தொடர்ந்து 5 சதவீத வாக்கு வங்கியை 30 ஆண்டுகளாக வைத்திருந்தது. கடந்த பேரவைத் தேர்தலில் மட்டுமே பாமகவின் வாக்கு வங்கி 3.8 சதவீதமாக சுருங்கியது. இருப்பினும் அரசியல் சக்தி என்ற அந்தஸ்தை இதுவரை இழக்காமல் இருப்பது பாமகவின் பலமாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் பாமக பின்னடைவை சந்திக்கும்போது மீண்டும் வாக்கு வங்கியை பலப்படுத்த ஜாதி அரசியலை கையில் எடுக்கிறது என்ற விமர்சனம் உள்ளது. மீண்டும் பின்னடைவு ஏற்பட்டால், ஜாதி அரசியலுக்கு பாமக செல்லாது என்ற எண்ணத்தை பாமக உருவாக்க வேண்டிய கட்டாய சூழலில் உள்ளது.
வடதமிழகத்தில் 30 சதவீத வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கும் பாமக, அரசியல் களத்தில் தனக்கு நேர் எதிராக திரும்பும் 30 சதவீத ஆதிதிராவிடர்கள், 30 சதவீத பிற்பட்டோர் சமூக வாக்குகளை சமாதானப்படுத்துவதற்கான முன்முயற்சிகளை எடுக்காவிட்டால் 2026இல் ஆட்சியைப் பிடிப்பது பகல் கனவாகவே மாறிவிடும்.
திமுகவை வன்னியர்கள் தங்களது கட்சியாக பார்த்ததுபோல அதிமுகவை இப்போது பார்க்கின்றனர். கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகத்துடன் போட்டி போட்டது போல இப்போது எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகத்துடன் போட்டியிட வேண்டிய சூழல் ராமதாஸுக்கு உருவாகியுள்ளது.
தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராமதாஸின் வாக்குகள் அதிமுகவில் தங்குவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தான் 2026இல் தனித்து ஆட்சி என்ற கோஷத்தை இப்போதே முன்வைக்கின்றனர். கே.சந்திரசேகரராவ் ஒட்டுமொத்த ஆந்திராவில் 4 சதவீத வாக்குகள் மட்டும் வைத்திருந்த நிலையில் மாநில பிரிப்பபு என்பதால் 13 சதவீதமாக மாறியது. அது 119 தொகுதிகள் கொண்ட தொகுதிகளில் 40 சதவீதம் வந்தது. அதேபோல, ஒட்டுமொத்த தமிழகத்தில் பெரும்பாலான வன்னியர்கள், அதிமுகவிலேயே ஐக்கியமாக வாய்ப்புண அடும். மாநிலம் பிரிந்தால் மட்டுமே பாமகவிடம் திரண்டு வர வாய்ப்பு உருவாகும்.
வடதமிழகத்தில் உள்ல 100 தொகுதிகளில் முதல் வாக்கு வங்கியுள்ள கட்சி அல்லது இரண்டாவது கட்சியாக மாறும். கூட்டணி ஆட்சியாவது அமைக்கலாம். 2024 மக்களவைத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை பிற கட்சியிடம் இழக்காமல், தனது வெற்றியையும் பெற வேண்டிய நிலையில் ராமதாஸ் உள்ளார். அப்போது தான் பாமக, அன்புமணியின் அரசியல் எதிர்காலம்.
2024 மக்களவைத் தேர்தலில் எப்படி கூட்டணி போகிறார், பேரைத் தேர்தலுக்கு எதை மையமாக வைத்து பேரவைத் தேர்தலை சந்திக்க போகிறார் கூட்டணி அரசியலில் 15 ஆண்டுகளாக சாதிக்க முடியவில்லை. எனவே, பலமுனை போட்டி உருவானால் தான் அவரால் சாதிக்க முடியும். இதையும் மையமாக வைத்து தான் பாமக தனது எதிர்கால முடிவை எடுக்க முடியும்.
2024 இல் எடுக்கும் முடிவை பொறுத்து தான் பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாட முடியும்.
பெட்டி செய்தி
இந்திய அரசியலிலேயே ராமதாஸ் போன்ற ஒரு சமூகத்திற்காக பணியாற்றியவர் வேற யாரும் இல்லை. அவரால் வன்னியர்கள் அடைந்த நன்மை அளவிற்கு வேறு யாராலும் அடைந்ததில்லை. அப்படிப்பட்ட பாமக தமிழகம் முழுவதும் பரவாமல் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. அந்த கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரவீந்திரன் துரைசாமி ஆரம்ப காலகட்டத்தில் வடக்கே வன்னியரை வைத்து அரசியல் செய்து போன்று தெற்கே தேவேந்திரகுலர் கையில் எடுத்து அரசியல் செய்தால் பாமகவை வளர்க்க முடியும் என யோசனை கூறியிருந்தார். அதை ஏற்றுக் கொண்ட டாக்டர் ராமதாஸ் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், இரும்புரை குணசேகரன் போன்றவர்களை கட்சியில் வளர்த்தார். ஆனால் பாமக கூட்டணி அரசியலுக்கு சென்ற பிறகு அந்த வியூகம் கைகூடவில்லை. தற்பொழுது முழுமையாக வன்னியர்களாகவே பெறுவதற்கு வன்னியர்களுக்கென்று தனி மாநிலம் எனும் கோரிக்கை வைத்து செல்வதே பாமகவின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.