பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் பிள்ளைகளுக்கும் மாரடைப்பு ஏற்பட அபாயம் உள்ளது

-டாக்டர் D.M.T.சரவணன், கே.எம்.சி.ஹெச் இதய நோய் சிறப்பு நிபுணர்.

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம் என்னவென்று தெரியுமா?

காலை எழுந்ததும் மொபைல் போனில் துவங்கும் தினம், அவசர உணவு, பரபரப்பான வேலை, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை புகை, மாலையில் மது, தூக்கமில்லாத இரவு என மீண்டும் மொபைல் போனோடு முடிகிறது. இதில் உடற்பயிற்சிக்கோ, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவதற்கோ மனமும் இல்லை; நேரமும் இல்லை. இதன் விளைவுதான் என்ன?

“முன்பெல்லாம் நெஞ்சு வலியும் மாரடைப்பும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும். ஆனால் இப்போது 25 வயதிலேயே மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி பாதிப்புகளோடு இளைஞர்கள் மருத்துவமனைக்குப் படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலை முன்பு இருந்ததில்லை” என கவலையுடன் சொல்கிறார், கே.எம்.சி.ஹெச் இதய நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் D.M.T.சரவணன். இளம் வயதில் மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது, அதை எப்படித் தவிர்க்கலாம் என சகலமும் பேசுகிறார் அவர்.

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம் என்ன?

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு பிறவி இதயக் குறைபாடு, மரபணுரீதியான காரணம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வாழ்க்கைமுறை மாற்றம் என பல காரணங்களைச் சொல்லலாம். மற்ற காரணங்களைத் தடுப்பது நம் கையில் இல்லை. ஆனால், வாழ்க்கைமுறையை ஆரோக்கியமாக மாற்றி, இதை நம்மால் தவிர்க்க முடியும். புகைப்பழக்கம், ஆரோக்கியமில்லாத உணவு, உடற்பயிற்சியும் உடல் உழைப்பும் இல்லாத வாழ்க்கை, மன அழுத்தம், தூக்கமின்மை இவைதான் இளவயதில் ஏற்படும் மாரடைப்புக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

மொபைல், டெலிவிஷன் என எலெக்ட்ரானிக் திரைகளைப் பார்த்தபடி நீண்ட நேரம் அமர்ந்திருப்பது அதிகரித்து வருகிறது. இதனால் தூங்கும் நேரமே தள்ளிப் போகிறது. இரவு 11 மணிக்குத் தூங்குவது பலரின் வாடிக்கை ஆகிவிட்டது. இதனால் தூங்கும் நேரமும் குறைகிறது. ஆழ்ந்த உறக்கமும் கிடைப்பதில்லை. தூக்கம் குறையும்போது, பல உறுப்புகள் போலவே இதயமும் பாதிக்கப்படுகிறது. ‘தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்’ என பலரைப் பற்றிய சோகச் செய்திகளைக் கேட்கிறோம். தூக்கத்தில் ஏற்படும் குளறுபடிகளே அதிகாலை நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம்.

இன்றைய வேலைச்சூழலும் பரபரப்புகளும், பலரையும் மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது. பல இளைஞர்களுக்கு மன அழுத்தத்தினால்தான் இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. புகைப் பழக்கமும் மது அருந்துவதும் இதயத்தை நேரடியாக பாதிக்கின்றன.

உணவும் இதற்குக் காரணமா?

ஆமாம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவுகளே அந்தந்த பகுதிகளில் விளைகின்றன. ஆனால், நாம் இந்தியாவில் இருந்துகொண்டு மேற்கத்திய நாடுகளின் உணவுகளை சாப்பிடுகிறோம். வெளியிடங்களில் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. நம் வீடுகளிலேயே உணவுப்பழக்கம் மாறிவிட்டது. நூடுல்ஸ், பாஸ்தா என்று நமது வாழ்க்கை முறைக்குப் பொருந்தாத உணவுகளைத்தான் பலரும் சாப்பிடுகிறார்கள். நம் பாரம்பரிய உணவுகள் கூட மாறிவிட்டன. அரிசியில் தொடங்கி எல்லாவற்றையும் பாலீஷ் செய்து சத்தில்லாத பண்டங்களாக மாற்றிவிட்டோம். அதிக எண்ணெய் சேர்த்த, அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது ரத்தக்குழாய்களில் அடைப்புகளை உருவாக்கி இதய செயல்பாட்டினை பாதிக்கிறது.

யாருக்கு ஆபத்து அதிகம்?

பெற்றோருக்கு 50 வயதிற்கு முன் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், பிள்ளைகளுக்கு இளம்வயதில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அவர்கள் சிறுவயதிலிருந்தே கவனத்தோடு இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவர்களோடு, நீரிழிவு நோய் உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள் ஆகியோரை ‘அதிக ஆபத்துள்ளவர்கள்’ எனக் குறிப்பிடுவோம். இவர்கள் 25 முதல் 30 வயதிற்குள் இதயப் பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.

பெற்றோருக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் இருந்தால், பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஆபத்து இருக்கும். எந்த ஆபத்துப் பட்டியலிலும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், 40 வயது முதல் இதயத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இதயப் பரிசோதனைகள் அவசியம்.

பாதிப்புகளைத் தவிர்க்க என்ன வழி?

  • புகை, மது தவிர்க்க வேண்டும்.
  • உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
  • ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், கொழுப்பு உணவைக் குறைக்க வேண்டும்.
  • சர்க்கரை நோயையும் கட்டுக்குள் வைக்கவும்.
  • தினமும் அரை மணி நேர நடைப்பயிற்சி அவசியம். குறைந்தது வாரம் 5 நாட்களுக்கு இப்பயிற்சி தேவை.
  • ஆரோக்கியமான சரிவிகித சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும்.
  • தேவையற்ற வாக்குவாதம், கோபம், எரிச்சல், டென்ஷன் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
  • உணர்ச்சிவசப்படுவதைக் குறைக்க யோகா, தியானம் செய்யுங்கள்.
  • மன அழுத்தம் தவிர்க்கவும். குடும்பத்தினர், நண்பர்களுடன் மனம்விட்டு உரையாடுங்கள். மனம் லேசாகும்.
  • புகை, மது தவிர்த்து, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாத வாழ்க்கை, நிம்மதியான தூக்கம் ஆகியவற்றைப் பின்பற்றினால் உங்கள் இதயத்துக்கு ஆயுள் அதிகம்.

சிகிச்சைகள் என்னென்ன?

மாரடைப்பு வருவதற்கு முன் பாதுகாத்துக்கொள்வதும், மார்பில் வலி ஏற்பட்டதும் சிகிச்சையைத் துவங்குவதும் மிக முக்கியம்.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு இதயத்தை மிகத் துல்லியமாகப் பரிசோதித்து பார்க்க கருவிகள் வந்துவிட்டன. இவை அனைத்தும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிறப்பாக உள்ளன. குறிப்பாக, Intra Vascular Ultrasound எனும் கருவியைக் கொண்டு Ultra- sonic imaging மூலம் ரத்தக் குழாயில் உள்ள அடைப்புகளையும், அதன் தன்மையையும் கண்டறிவதும், அதன்பின் தரப்படும் சிகிச்சையும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

-எம்.ஹரிஹரன்

மேலும் விவரங்களுக்கு: கே.எம்.சி.ஹெச் ஹார்ட் இன்ஸ்டிட்யூட், கோவை மெடிக்கல் சென்டர் – ஹாஸ்பிட்டல், 99, அவினாசி ரோடு, கோவை-641014.

போன் : 0422-4323800, 0422-4323244