புதிய பயணத்தில் விஜய் : விஜயகாந்தா ? ரஜினிகாந்தா ?

நடிகர் விஜய் அரசியலில் குதிக்க காத்திருக்கும் நிலையில் எந்தக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விவாதம் பட்டித்தொட்டி எங்கும் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு, ஊக்கத்தொகை, பரிசு வழங்கும் விழாவை சென்னை – நீலாங்கரை பகுதியில் நடத்தி முடித்திருக்கிறார். இந்த நிகழ்வில் அவர் சில கருத்துகளை முன்வைத்துப் பேசினார்.

அதில் லேசாக தனது அரசியல் பார்வையையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதிலிருந்து நாம் சிலவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. விஜய் தனது பேச்சின் தொடக்கத்திலேயே கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் வகையில், ‘அசுரன்’ பட வசனத்தை மேற்கோள் காட்டியிருந்தார். தொடர்ந்து முழுமையான கல்வி குறித்து அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கருத்தையும் பகிர்ந்தார். அப்படியே குணாதிசய பண்பு குறித்துப் பேசிய அவர், சமகால தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் பங்கு குறித்தும் பேசினார். குறிப்பாக, வாக்கு செலுத்த பணம் பெறுவது கூடாது என்ற கருத்தை உறுதிபட முன்வைத்தார். இந்த மாற்றம் நிச்சயம் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் மத்தியல் அவசியம் நிகழ வேண்டும் என்பது அவர் பேசியதில் புரிந்துகொள்ள முடிந்தது.

அதோடு நிற்காமல் சமூகத்தில் சமநிலை வேண்டும் என உரக்கச் சொல்லிய அம்பேத்கர், தமிழக சமூக – அரசியலில் முன்னோடிகளாக திகழ்ந்த பெரியார் மற்றும் காமராஜர் குறித்தும் பேசியிருந்தார். இதை எப்படி சொல்லி இருந்தார் என்றால் ‘நாளைய தலைமுறையினராக உள்ள நீங்கள் தலைவர்கள் குறித்து அதிகம் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்’ என சொல்லியபோது இந்தத் தலைவர்களின் பெயர்களை விஜய் பகிர்ந்தார்.

இதன் மூலம் அவர் இடதுசாரி மற்றும் திராவிட அரசியலை முன்னெடுக்கிறாரா என்ற கேள்வியை எழச் செய்கிறது. ஏனெனில், சமூக சமத்துவத்தை ஆதரிப்பதுதான் கருத்தியல் ரீதியாக இடதுசாரி மற்றும் திராவிட அரசியல் இயக்கங்கள் முன்வைக்கும் நிலைப்பாடு. அதையே நடிகர் விஜயும் முன்வைக்கிறார். ஏனெனில், சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் திராவிட அரசியல் பேசும் கட்சிகள்தான் ஆட்சியில் இருந்து வருகின்றன.

அதைக் கூர்ந்து கவனித்துள்ள விஜய், அதே வரிசையில் தனது அரசியலை முன்னெடுக்க விரும்புவதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல் அவரது இலக்கு அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. மேலும், மாநில அரசியல்தான் இப்போதைக்கு அவர் இலக்காக  இருக்கு வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை அவரது சமீபகால நலப்பணி திட்டங்கள் குறித்த அறிவிப்பிலும் நடவடிக்கைகளிலும் ‘தொகுதி வாரி’ என்ற சொல் தவறாமல் இடம்பெறுவது உறுதி செய்கிறது. இதுநாள் வரை தனது படங்கள் மற்றும் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளின்போது மட்டுமே அரசியல் பேசி வந்த விஜய், முதல் முறையாக தனது மக்கள் இயக்க நிகழ்வில் அதை பேசியுள்ளார். மறுபக்கம் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலமாக மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் கவனித்து வருகிறார்.

அதேபோல், அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியை விஜய் பின்பற்றுவதையும் கவனிக்க முடிகிறது. பல்லாண்டுகளாக ரசிகர்கள் மன்றங்கள், ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலமாக ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கி, அதை அரசியல் கட்சியாக மாற்றியவர் விஜயகாந்த். அவர் வழியிலேயே ‘விஜய் மக்கள் இயக்கம்’ வளர்ந்து வருவதையும் கவனிக்கலாம்.

பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், தனது இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர். இப்போது பிரமாண்டமான நிகழ்வு மூலம் மாணவ, மாணவிகளுக்கு நேரில் ஊக்கத்தொகை வழங்கியிருப்பதும், அதில் பேசிய விதமும் 2026ல் நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வர அவர் திட்டமிட்டுள்ளதற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்க வேட்பாளர்கள்  குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது மட்டுமின்றி, அவர் அரசியலுக்கு வருவதை மிகத் தெளிவாக குறிப்பால் உணர்த்துகிறது. இந்தப் போக்கு அடுத்தடுத்து எப்படி முன்னெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அவரது அரசியல் பயணம் இருக்கும்.

விஜய் அரசியல் பிரவேசம் குறித்து முதலில் கருத்து தெரிவித்தவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். அவர் கூறும்போது, ‘வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். உங்களுக்கு ஏதும் பிரச்னையா? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை’ என்றார்.

நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பா ?

விஜய் குறித்து முதலில் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னுடைய பாதை வேறு அவருடைய பாதை வேறு. திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஓர் இனத்தை வழிநடத்துவதற்குத் தலைவனாக இருப்பதற்கான தகுதியாகக் கூறுவது அவமானகரமானது. அதை எல்லோரும் சேர்ந்துதான் மாற்ற வேண்டும் என விமர்சிக்கவும் செய்தார். மற்றொரு பேட்டியில், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேறு, நான் வேறு. எங்களுக்குள் இருப்பது அண்ணன் – தம்பி பந்தம் மட்டும்தான். எந்தச் சலசலப்புக்கும் எங்கள் கட்சியும், தொண்டர்களும் அஞ்ச மாட்டார்கள் என்றார்.

விஜய் அரசியல்  பிரவேசம் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பொது வாழ்கைக்கு எந்த பருவத்திலும் வரலாம். அதில் தவறு கிடையாது. பொதுவாக ‘சினிமா’வில் உள்ள அனைவரும் ‘சினிமா பாப்புலாரிட்டி’ இருந்தால் போதும் உடனே ‘முதலமைச்சர்’ ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தோடு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த சாபக்கேடு உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் திரை உலகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் வேலையை மட்டும்தான் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமாவில் உள்ளவர்கள் எல்லா வேலையையும் முடித்துவிட்டு ‘மார்க்கெட்’ போகும்போது அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். முற்போக்கான கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்றுவதே தமிழ்நாட்டின் தேவையாக உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலுமே ‘சினி ஸ்டார்ஸ்’ கடைசி காலத்தில் ‘பவரு’க்கு வரலாம் என்று கணக்குப்போடுவது கிடையாது. கேரளாவில் மம்முட்டி, கர்நாடகாவில் ராஜ்குமார், அமித்தாபச்சன் ஆகியோர் இதற்கு ஆசைப்படவில்லை. மக்களுக்கு தொண்டு செய்து எத்தனையோ பேர் சிறைக்கு சென்று உள்ளார்கள். அவர்களை எல்லாம் சினி பாப்புலாரிட்டி மூலம் ஹைஜாக் செய்யலாம் என்ற எண்ணம் திரைத்துறையில் உள்ளவர்களுக்கு உள்ளது. இந்த கான்ஸ்செப்ட் தமிழ்நாட்டை தவிர எந்த மாநிலத்திலும் கிடையாது என்றார்.

விஜய் குறித்து அண்ணாமலை பதில் அளிக்கும்போது, யார் ஒருவர் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், ஊழலை ஒழிக்கக் கூடிய ஒரு கட்சியை உருவாக்கப் போறேன் எனக்கூறி அரசியலுக்கு வருகிறாரோ அவரை பாஜக வரவேற்கும். அனைத்துக் கட்சியினரும் மக்களிடம் தங்களின் கொள்கைகள் குறித்து கூறுவோம், மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் வரட்டும். மக்கள்தான் எஜமானர்கள். விஜய் அரசியலுக்கு வரவேண்டுமென்று நினைத்தால் கண்டிப்பாக வர வேண்டும். எந்த தீய சக்தியாவது இதை தடுக்க முற்பட்டால் தமிழக மக்கள் விடமாட்டார்கள். தமிழக அரசியலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார் அவர்.

மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சியை விஜய் தவிர்க்க வேண்டும் என்றார்.

அரசியல் தலைவர்கள் கூறும் கருத்துக்களை பார்க்கும்போது சீமான், திருமாவளவன் ஆகியோரின் பேச்சில் ஏதோ சில பதற்றம் இருப்பது தெளிவாகிறது. அதேபோல, விஜய் வந்தால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, பிற கட்சிகளுக்கு தான் பாதிப்பு என்பதை அறிந்துகொண்ட அண்ணாமலை விஜய் வர வேண்டும் என ஆசையுடன் வரவேற்கிறார். விஜய் வரும்போது பார்த்துகொள்ளலாம் இப்போதைக்கு எதிர்க்க வேண்டாம் என்ற கருத்துடன் நிதானமாக பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

2026 பேரவைத் தேர்தலுக்கு விஜய் வரப்போவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. அவரது வருகை யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பேரவைத் தேர்தல் நெருங்கும்போது தான் தெளிவாகத் தெரியும்.

எல்லாம் சரி, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், விஜயகாந்த் போல் இரண்டு ஆளுமைகளான கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் இருக்கும் போதே அரசியலுக்கு துணிவுடன் வந்து செயல்பட்டதைப் போல் விஜய் செயல்படுவாரா ? அல்லது ரஜினிகாந்தை போல் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு கடைசியில் வரவில்லையென கூறி மக்களை ஏமாற்றியது போல் ஏமாற்ற போகிறார ?. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.