+2 தேர்வில் 50,000 பேர் ஆப்சென்ட்: காரணம் என்ன?

பொதுவாகவே இந்தியாவில் உள்ள மாநிலங்களில், கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. ஆனால் சமீப காலமாக அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவே தோன்றுகிறது. அதில் ஒன்றுதான் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய எட்டரை லட்சம் பேரில் சுமார் 50,000 பேர் முதல் நாள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தி.

இந்த 50,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற செய்தி சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல. இது தொடர்ந்தால், இந்த இளைஞர்களின் திறமை என்பது எதிர்காலத்தில் தமிழ்நாடு இழக்கப்போகும் சொத்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர். இந்நிலையில் தேர்வெழுதாதவர்கள் 50,000 பேர் என்பது கடுமையாக பாதிப்பை தரக்கூடிய ஒன்று என்பதை உணர வேண்டும்.

தமிழக கல்வித்துறை அமைச்சகம் இதுகுறித்து ஒரு தெளிவான விளக்க அறிக்கையை அளித்திருக்கிறது. அது என்னவென்றால் சென்ற ஆண்டு இடைநிற்றல் காரணமாக பள்ளியை விட்டு நின்ற மாணவர்களில் பல்லாயிரம் பேரை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர். அவர்களில் மிகப் பலரும் பள்ளிக்கு வராத நிலையில் அவர்களுக்கும் வருகைப்பதிவு வழங்கப்பட்டு தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் பல பேர் வராததால் தான் இந்த எண்ணிக்கை 50,000 ஆக உயர்ந்திருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதுபோக அமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்று ஒவ்வொரு தனி காரணங்கள் இருக்கலாம், இது பற்றி ஆய்வு நடத்தப்படும் என்று கூறியிருக்கின்றார்.

மேற்சொன்ன காரணங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் இந்த குறைபாட்டைக் களைய வேண்டியது அரசின் உடனடி கடமை. குறைபாடுகளைக் களைவதற்கு இவர்களுக்கு மறு தேர்வு வைப்பது, தேர்வில் தேர்ச்சி அளித்து தூக்கி விடுவது என்பது போன்ற செயல்கள் சிக்கல்களை உருவாக்கி விடும்.

2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நமது நாட்டில் பரவிய பொழுது எல்லா பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. செல்போனில் கல்வி கற்கும் நிலை உருவாகியது. அரசும், பெற்றோரும் அதை ஊக்குவித்தனர். என்றாலும்கூட, அந்த சூழலால் கல்வி வழங்கும் நடைமுறை பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த கல்வித் தரமும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டது.  இன்னுமே கூட முழுமையாக அந்த பேரிடரில் இருந்து நாடும், நாட்டு மக்களும் மீண்டு விட்டதாக சொல்ல முடியாது. இந்த சூழலில் அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, பள்ளி மாணவர்களில் பலர் தேர்வு எழுதாமல் இருப்பது ஐயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏனென்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்பதற்கு வாய்ப்பு இல்லாததால் 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதாமல் விட்டிருக்கிறார்கள் என கூறப்படுகின்றது. அது உண்மையா என்பதை ஆராய வேண்டும். அதுவும் இடைநிற்றல் என்று பாதிக்கப்பட்ட பல ஆயிரம் பேரை அழைத்து வந்து சேர்த்துள்ளோம். இப்போது  அவர்களில் பல பேருக்கு கல்வியை தொடருகின்ற குடும்ப சூழல் இருந்ததா என்பது குறித்த ஆய்வை முழுமையாக செய்ய வேண்டும்.

பொதுவாகவே கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வி தரம் என்பது சற்று குறைந்து காணப்படுவதாகவே கல்வியாளர்களும், பணிவாய்ப்பு வழங்குபவர்களும் கூறுகின்றனர். இது நமது தமிழ் சமூகத்திற்கு நல்லது அல்ல. பள்ளி, கல்லூரியில் சேராமல் போனால், ஒரு திறனை வளர்த்து அவர்கள் பயிற்சி பெறாமல் போனால் அது அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல.

இவ்வாறு இருந்தால், நாளைய தமிழகத்தின் இளைய தலைமுறை எவ்வாறு தலை நிமிர்ந்து வாழ முடியும்? போட்டிகள் நிறைந்த சூழலில் தமிழ்நாடு உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார இலக்குகளை எவ்வாறு அடைய முடியும்? மக்களுக்கு வேலைவாய்ப்புகளை எவ்வாறு வழங்க முடியும்?

உலக அளவில் ஒரு தகுதியும் திறனும் மிக்க சமுதாயமாக உருவாக வேண்டிய காலகட்டம் இது. அதனால் கவனமாக இயங்க வேண்டிய நேரமாக தோன்றுகிறது. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும். உடனடியாக தீர்வு காண வேண்டும்!