“மூடநம்பிக்கை, சடங்குகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்”

மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயங்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவதாக அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராதிகா தெரிவித்துள்ளார்.

டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் ‘பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்’ நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக ராதிகா கலந்துகொண்டு பேசியதாவது: ஆணுக்கு நிகராக சம்பளமும், வாக்குரிமையும் மறுக்கப்பட்டபோது நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெண்கள் பெற்ற உரிமையின் அடையாளமான நாள்தான் மார்ச் 18. ஆனாலும் இன்றைய சூழலில் முழுமையான உரிமைகள் பெண்களுக்கு கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை.

குடும்ப வன்முறைகளும், போதைப்பொருள் கலாச்சாரமும், இணையவழி சூதாட்ட தற்கொலைகளும் பெருகியுள்ள சமுதாயத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. இந்நிலையில் பெண்கள் தனக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநிலக் குழுத்தலைவர் ராஜலட்சுமி, மாவட்டத் தலைவர் ஜோதிமணி, தாலுகா தலைவர் ஜீவாமணி, மாவட்ட உறுப்பினர் பத்மாவதி, காரமடை நகராட்சி மன்ற உறுப்பினர் பிரியாராஜேந்திரன் மற்றும் பொறுப்பாளர் கனகராஜ் பங்கேற்றனர்.