மாநில அளவில் மது விற்பனையில் கோவை 3 வது இடம்: தினமும் ரூ.8.61 கோடி வருவாய்

தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில், காஞ்சிபுரம் வடக்கு கலால் மாவட்டத்தில் தினமும் சராசரியாக 4.93 கோடி ரூபாய்க்கும், தெற்கு கலால் மாவட்டத்தில் 4.47 கோடி ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் 9.40 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனையாகி வருகிறது. இதற்கு அடுத்த இடத்தில் சென்னையில் ரூ.9.07 கோடிக்கு தினசரி மது விற்பனையாகிறது. கோவை வடக்கு கலால் மாவட்டத்தில் 166 மதுபான கடைகளில் தினமும் சராசரியாக 5092 பெட்டி இந்திய தயாரிப்பு மற்றும் அந்நிய மதுபானங்களும், 2,654 பீர் பெட்டிகளும் என தினமும் 4.54 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தெற்கு கலால் மாவட்டத்தில் 139 மதுபான கடைகளின் மூலமாக 5,221 இந்திய தயாரிப்பு, அந்நிய மதுபான பெட்டிகளும், 2,090 பீர் பெட்டிகளும் விற்பனையாகி வருகிறது. தினமும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு 4.07 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையாகிறது.

கோவை மாவட்டத்தில் 305 மதுபான கடைகளின் மூலமாக 8.61 கோடி ரூபாய்க்கு தினசரி வருவாய் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில், திருவள்ளூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் இருக்கிறது. வழக்கமாக கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் மது விற்பனையில் 2 அல்லது 3-வது இடத்தில் நீடித்து வந்தது.

பனியன் நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் வேலை இழப்பு காரணமாக மதுபான விற்பனை குறைந்து வருவது தெரியவந்துள்ளது. திருப்பூரில் தினசரி மதுபான விற்பனை 6.21 கோடி ரூபாயாக இருக்கிறது.

கடந்த ஆண்டில் 8 கோடி ரூபாய்க்கு அதிகமாக மதுபானம் விற்பனையாகி வந்தது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை உச்சத்தில் இருக்கிறது. விவசாய தொழில் அதிகமாக நடக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 159 மதுபான கடைகள் மட்டுமே இருக்கிறது. இங்கு 5.20 கோடி ரூபாய்க்கு தினமும் மதுபானம் விற்பனையாகிறது. குறைந்த கடைகள் இருந்த போதிலும் அதிகளவு மதுபானம் விற்பனை நடப்பது குறிப்பிடத்தக்கது.