சச்சிதானந்த பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை வழிபாடு

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருக்குத் பாத பூஜை வழிபாடு நடத்தினர்.

பேரூராதீனம், சாந்தலிங்க மருதாசல அடிகளார் முன்னலையில், பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமையில் பெற்றோர் திருவடி வழிபாடு நடைபெற்றது. மாணவர்கள் தங்களின் பெற்றோர்களின் பாதங்களை நீரிட்டு வழிபாடு செய்தனர்.

சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில்: பெற்றோர் திருவடி வழிபாடு பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகின்றது. பெற்றோர்கள் தங்களின் பிறந்த நாளில், திருமண நாளில், குழந்தையின் பிறந்த நாளில், திருவடி வழிபாட்டினை எளிய முறையில் செய்தால், வீட்டில் அருள்நெறி தழைக்கும் என்றார்.

பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமை உரையில்: நமது கலாச்சாரத்தை மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.

மாணவ மாணவியர் அனைவரும், எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும், தங்கள் பெற்றோரை வணங்குகின்றபோது, அச்செயல் சிறப்பாக நிறைவேறும். மாணவ மாணவியர் அனைவரும் கல்வி பெறுவதுடன், சேவை புரிகின்ற நோக்கத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

பள்ளிச் செயலர் கவிதாசன் தனது வாழ்த்துரையில், பெற்றோருடைய ஆசீர்வதம் எல்லா நிலைகளிலும், நம்மை உயர்த்தும். காலங்கள் மாறலாம், அறிவியல் வளரலாம், தொழிநுட்பத்தில் புரட்சி ஏற்படலாம், இருந்தாலும் நமது கலாச்சாரம்தான், நம்முடைய வாழ்க்கையைத் தாங்கி நிற்கின்ற வேராக இருக்கின்றது.

தாய் தந்தையரைச் சார்ந்து அல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. பெற்றோரைக் கொண்டாடுகின்ற சமுதாயம், வாழ்க்கையில் உயர்ந்துகொண்டே இருக்கும். பணிவு தான் நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்றார்.

நிகழ்வில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளித் துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.