ஜனாதிபதி வருகை: கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா இன்று மாலை, 6:00 மணி முதல், நாளை (பிப்.,19) காலை, 6:00 மணி வரை நடக்கிறது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

டில்லியில் இருந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்லும் அவர், சுவாமி தரிசனம் முடிந்ததும், மதுரையில் இருந்து, இந்திய விமானப்படை விமானத்தில், இன்று மாலை, 3:10 க்கு கோவைக்கு வருகிறார். ஜனாதிபதியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து, குண்டு துளைக்காத காரில், ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் மாலை, 5 மணிக்கு ஈஷா சென்று வழிபடுகிறார். இரவு உணவுக்கு பின், அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவையில், ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நாளை (19ம் தேதி) காலை,9 மணிக்கு சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து, ஜனாதிபதி, ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னுார் ஜிம்கானா மைதானத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு செல்கிறார்.

போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து, கல்லுாரி, ‘திரி சக்தி’ அரங்கில், பயிற்சி பெறும் முப்படை அதிகாரிகள் முன் பேசுகிறார்.

பின் நண்பகல் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.