அதிமுகவுக்கு சவாலாகும் அரவக்குறிச்சி கூடார பார்முலா

ஈரோடு கிழக்கில் திமுக செயல்படுத்தி வரும் அரவக்குறிச்சி கூடார பார்முலா அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற சூழல் 2006 பேரவைத் தேர்தலுக்குப்பிறகு உருவாகிவிட்டது. அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மட்டுமே விதிவிலக்கு. இத்தேர்தலில் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 52 சதவீத வாக்குகளைப் பெற்று இரட்டை இலைக்கான வாக்குகளை 26 சதவீதமாக குறைத்ததுடன், உதயசூரியனை டெபாசிட் இழக்கச் செய்தார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதால் 2019 மக்களவைத் தேர்தலுடன் வந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, பொதுவாக நடக்கும் இடைத்தேர்தலுடன் ஒப்பிட முடியாது. பொதுத்தேர்தலுடன் நடந்த இடைத்தேர்தல் என்பதால் பொதுவாக நடக்கும் இடைத்தேர்தல் போல ஆளும் அதிமுகவால் கவனம் செலுத்த முடியவில்லை. அதில் எதிர்கட்சியாக இருந்த திமுக 13 தொகுதிகளில் வென்றது. ஆளும் அதிமுக 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்கவைத்தது.

தமிழகத்தில் கடந்த 1980 முதல் இதுவரை மொத்தம் 49 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 41 ல் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மீதி 8 இடங்களில் எதிர்கட்சிகள் வென்றுள்ளன. 2004 ல் அதிமுக ஆட்சியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ராஜினாமா செய்ததால், மங்களூர் (தனி) தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட வெ.கணேசன் 61,956 வாக்குகள் பெற்று ஆளும் அதிமுக வேட்பாளரான கே.ராமலிங்கத்தை (48,070) வீழ்த்தி வெற்றி பெற்றார். தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது இதுதான் கடைசி.

அதன்பிறகு நடந்த எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 2006 முதல் 2011 வரை நடந்த 11 இடைத் தேர்தல்களிலும் ஆளும்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றன. 2011 ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை, ஏற்காடு, ஆலந்தூர், ஸ்ரீரங்கம் என 6 இடைத் தேர்தல்களிலும் ஆளும் அதிமுக வெற்றி பெற்றது.  2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் விக்கிரவாண்டி, நான்குநேரி பேரவை இடைத்தேர்தல்களில் அதிமுக தான் வெற்றிபெற்றது.

புதிதாக உருவாகும் உத்திகள்

இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணம் வாக்காளர்களை கவர புதிய உத்திகளை ஆளும் கட்சி கையாளுவது தான் முக்கிய காரணம். 2005 இல் நடந்த காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத்தேர்தலில் லட்டுக்குள் மூக்குத்தியை வைத்து ஆளும் அதிமுக விநியோகம் செய்வதாக திமுக குற்றஞ்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, அதிமுகவின் கோட்டையான திருமங்கலம் தொகுதியில் 2008 இல் நடந்த இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் 100 வாக்காளர்களை நிர்வகிக்க ஒரு கட்சி நிர்வாகி என வியூகம் அமைத்து வாக்காளர்களை குஷிப்படுத்தியது திருமங்கலம் பார்முலா என பிரபலமானது.

அரவக்குறிச்சி கூடார பார்முலா 

இந்நிலையில் தான், ஈரோடு கிழக்கில் திமுக கையாளும் அரவக்குறிச்சி கூடார பார்முலா அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒன்று அல்லது இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மிகப்பெரிய கூடாரம் அமைத்து அப்பகுதியில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினரை காலையும், மாலையும் முழுஉபசரிப்புடன் தங்கவைத்து எதிர்கட்சியினர் பிரசாரம் செய்ய வரும்போது வீடுகளில் வாக்காளர்கள் இல்லாத சூழலை உருவாக்குவது தான் இந்த பார்முலாவின் முக்கிய அம்சமாகும்.

இது குறித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம் கூறும்போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் சுமார் 120 இடங்களில் கட்சி காரியாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய கூடாரத்தை திமுக அமைத்துள்ளது. வாக்காளர்களில் பெரும் பகுதியினரை தினமும் காலையில் 7 முதல் 11 மணி வரையிலும், மாலையில் 4 முதல் இரவு 9 மணி வரையிலும் அங்கு திமுகவினர் அடைத்துவைத்துக்கொள்கின்றனர்.

தினமும் ரூ.500 முதல் முதல் ரூ.1,000 வரை பணம், உணவு, உற்சாக பானங்கள் கொடுத்து ஏழை வாக்காளர்களை ஏமாற்றி கூடாரத்தில் தங்கவைக்கின்றனர். அங்கு பெரிய திரைச்சீலைகளை வைத்து பொழுபோக்குக்காக சினிமா படங்களை திரையிடுகின்றனர்.

வீட்டில் இருந்து வெளியே வர விரும்பாதவர்களுக்கு தனியாக பரிசு கொடுத்து வெளியே வர விடாமல் மிரட்டுகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்யச் சென்றால் தெருக்களில் யாரும் இருப்பதில்லை. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரத்துக்கு வந்தபோது அவர் பிரசாரம் செய்ய வரும் வழியில் உள்ள வாக்காளர்களில் பெரும் பகுதியினரை சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, கோவை மாவட்டம் ஆழியாறு அணை ஆகியவற்றுக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றுவிட்டனர்.

அதேபோல, தினமும் சென்னிமலை, பவானி கூடுதுறை என ஆன்மிகச் சுற்றுலாவுக்கும் வாக்காளர்களை அழைத்துச் செல்கின்றனர். திருமங்கலம் பார்முலாவையும் மீஞ்சும் வகையில் ஈரோடு கிழக்கில் புதிய பார்முலாவை திமுகவினர் அமல்படுத்தி வருகின்றனர்.  இது குறித்து புகார் செய்தால் தேர்தல் அதிகாரிகள் கண்துடைப்பாக தான் நடவடிக்கை எடுக்கின்றனர் என்றார் அவர்.

இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது, தேர்தல் பணிமனைகள் மட்டுமே பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தாங்களாக விருப்பப்பட்டு தேர்தல் பணியாற்ற வருகின்றனர். தேர்தல் பணிமனைகளில் வாக்காளர்கள் அடைக்கப்படுவதாக கூறுவது தவறான தகவல். சில தேர்தல் பணிமனைகளுக்கு எதிர்கட்சியினர் காவல்துறையுடன் வந்து அங்கிருந்த வாக்காளர்களை அழைத்துப் பார்த்தனர். காவல்துறையினர் முன்னிலையில் எதிர்கட்சியினர் அழைத்தும் யாரும் செல்லவில்லை. வாக்காளர்களை அடைத்து வைப்பதாக எதிர்கட்சியினர் தான் புகார் கூறுகிறார்களே தவிர எந்த வாக்காளரும் இதுவரை புகார் அளிக்கவில்லை.

எனக்கு ஒதுக்கப்பட்ட 3 வார்டுகளில் 22 வாக்குச்சாவடிகளில் சுமார் 20,000 வாக்காளர்களை அவர்களின் வீடுகளில் நேரடியாக ஒருமுறை சந்தித்துவிட்டேன். எங்குச் சென்றாலும் ஆரத்தி தட்டுகளுடன் வாக்காளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். எதிர்கட்சித் தலைவர்கள் பிரசாரத்துக்கு வந்தால் பெரும்பாலான வீடுகளில் இருப்பவர்கள் பூட்டிக்கொண்டு உள்ளே தான் இருக்கின்றனர். எதிர்கட்சியினர் மீது நம்பிக்கை குறைவாக இருப்பதால் யாரும் வெளியே வருவதில்லை. தேர்தல் முடிவை முன்கூட்டியே தெரிந்துகொண்ட  அதிமுகவினர் இப்போதே அதற்கான காரணங்களை அடுக்கத் தொடங்கிவிட்டனர் என்றார் அவர்.

கூடார பார்முலா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியதுடன் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து 13 கூடாரங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது வெளிதொகுதிகளில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆள்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிமுக. அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலின்போது அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வரக்கூடிய சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த கூடார பார்முலா இம்முறை ஈரோடு கிழக்கில் முழுமையாக அமல்படுத்தப்பட்டிருப்பது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.