கோவை மாநகரில் 33 ரவுடிகள் கைது

கோவை மாநகரில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை மாநகரில் 2 கொலைகளை தொடர்ந்து ரவுடிகள் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை வடக்கு, தெற்கு நகர் பகுதிகளில் சிறப்பு வாகனத் தணிக்கை, விடுதி தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதில் தெற்கு நகர் பகுதியில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 வீடுகளில் சோதனை நடத்தி 19 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து கத்தி, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. வடக்கு நகா் பகுதியில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்றும், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.