நிலநடுக்கம்: இயற்கை விடும் எச்சரிக்கையா?

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உடனடி தகவல்களே 7000 பேருக்கு மேல் பலியாகி இருப்பதாக தெரிவிக்கின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி தவிக்கின்றனர், காயம் பட்டிருக்கின்றனர், மரணமடைந்திருக்கின்றனர் என்பது தெரியவில்லை. உலகின் பல நாடுகளும், பல அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. நமது இந்திய நாடும், பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் இதுபோல இயற்கை பேரிடர்கள் ஏற்படும்பொழுது அதைப் பற்றி பேசுவதும், பிறகு மறந்து விடுவதுமாக நமது மனிதகுலம் இருந்து வருகிறது. இயற்கை பேரிடர்களை முற்றிலுமாக நிறுத்தி விடவோ, தடுத்து விடவும் முடியாது. ஆனால் இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும். அதுவும் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகள், மீட்பு நடவடிக்கை கருவிகள், முன்கூட்டியே அறிவிக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் இதனைச் செய்ய முடியும்.

இன்று துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் என்பது பூமியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அல்ல. முன்பை விட பல வகையிலும் முன்னேறிய தகவல் நுட்பங்களும், தொழில்நுட்பங்களும் உள்ளன. முன்பு ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்த பல ஆய்வு அறிக்கைகள் உள்ளன. அவை வரும் காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒரு அடித்தளமாக அமைய வேண்டும். யூரேஷியன் மற்றும் ஆப்பிரிக்கன் பிளேட்டுகள் எனும் நிலப் பலகை தளங்களில் ஏற்படும் நகர்வு மற்றும் அதிர்வால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக ஆசிய நாடுகளில் அதிகமாக உணரப்படும் பேரிடராக இது தெரிகிறது. 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சீனாவில் 182, இந்தோனேசியாவில் 161, ஜப்பானில் 94, இந்தியாவில் 57, பிலிப்பைன்ஸில் 52, துருக்கியில் 58, ஈரானில் 108 என்று நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. எனவே இதுகுறித்த அறிவியல் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான மனித உயிரிழப்பு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார இழப்பு, மீட்டெடுக்க வேண்டிய வள ஆதாரங்கள், நிவாரணம், மருத்துவ செலவு என்று மிகப்பெரும் அளவில் பேரிழப்பை ஏற்படுத்துவதாக இது போன்ற பேரிடர்கள் அமைகின்றன.

எனவே இதுபோல நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து ஆய்வுகள் முறையாக நடத்தப்பட வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இன்றைய நகர நாகரீகத்தில் கான்கிரீட் கட்டிடங்கள் தவிர்க்க முடியாதது. அந்த கட்டிடங்கள் தான் இடிந்து இன்று பல ஆயிரம் பேரை பலி வாங்கி இருக்கிறது. எனவே இதுகுறித்த எதிர்கால செயல்பாடுகள் பற்றி ஆட்சியில் உள்ளவர்களும், கட்டிடக்கலை வல்லுநர்கள் உள்ளிட்டவர்களும் சிந்தித்து எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.

இந்த நிலநடுக்கம் குறித்து டச்சு நாட்டு ஆய்வாளர் ஒருவர் முன்பே கணித்து மூன்று நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் இது குறித்த புரிதலோ, ஒருங்கிணைப்பு, நம்பிக்கையோ போதாத நிலையில் நிலைமை கைமீறி விபரீதம் நடந்து முடிந்து விட்டது. எனவே இதுபோன்ற ஆய்வுகளை ஒருங்கிணைத்து சேதத்தை குறைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

இது மட்டுமல்லாது பெருநாட்டில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது இயற்கைக்கு எதிரானதாக மனிதர்கள் இயங்குவதால் ஏற்படுகிறது. மாபெரும் கட்டுமானத் திட்டங்கள் மற்றும் காடுகள், மலைகள் போன்ற இயற்கை அமைப்புகளில் உருவாகும் செயற்கை மாற்றங்கள் ஆகியவையும் பேரிடர்களை உருவாக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இமயமலை பகுதியில் இது போல நிலச்சரிவுகள் ஏற்படுவதும், தென்னிந்திய பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக புயல்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கூட இதுபோன்ற காரணிகளால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இயற்கையிலிருந்து மனிதன் தனியாக விலகி வாழ்ந்து விட முடியாது. அதே சமயம் அதனை சுரண்டி பாழ்படுத்திவிட்டும் வாழ்ந்து விட முடியாது. இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறையும், நிலைத்த பயனை தரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமே மனிதர்களைக் காப்பாற்றும். வரைமுறை இல்லாத, கட்டுப்பாடுகள் அற்ற செயல்கள் பேரிடர்களை கொண்டு வந்து சேர்த்து விடும்.