கோனியம்மன் கோயில் தேரோட்டம் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கவேண்டும்

– வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை கோனியம்மன் திருக்கோயில் மாசி தேரோட்டத்தின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: கோவை மாநகரின் ‘காவல் தெய்வம்’ என்றழைக்கப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோவை மாநகரின் மையப் பகுதியான டவுன்ஹால், மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இத்திருக்கோயில், கோவை மாநகர மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட திருக்கோயில். கோவை மாநகரமே இத்திருக்கோயிலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு கோனியம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் நடைபெறும் திருத்தேரோட்டம், மிகமிக முக்கியமான திருவிழா. லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவுக்கு வருவார்கள். எனவே அருள்மிகு கோனியம்மன் திருத்தேரோட்டம் நடக்கும் நாளன்று கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று கோவை மாநகர மக்களும், அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் பக்தர்களும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை ஏற்று, அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மாசி தேரோட்டத்தின் போது, கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.