கோவையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு

கோவையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தற்போது இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை மாநகரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதித்தேர்வு மற்றும் சிறைக் காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் பெண் காவலர்களுக்கும், காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆண் காவலர்களுக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் 548 பெண்களும், 623 ஆண்களும் கலந்து கொண்டனர். இவர்களிடையே சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், கண் பார்வை பரிசோதனை மற்றும் 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்றன.

தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த தேர்வு முறைகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.