மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு சைமா பாராட்டு

விஸ்கோஸ் செயற்கை பஞ்சு தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான காலத்தை நீட்டியமைக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) பாராட்டு தெரிவித்துள்ளது.

மத்திய ஜவுளி அமைச்சகம் கடந்த கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி விஸ்கோஸ் செயற்கை பஞ்சுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆணையை வெளியிட்டது. அதில், வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விஸ்கோஸ் செயற்கை பஞ்சை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்திய அரசின் பி.ஐ.எஸ் தரச்சான்றிதழைப் பெற வேண்டும் என்றும், அதற்கான கால அளவு 30 நாட்கள் என்றும் நிர்ணயித்திருந்தது. இந்த அறிவிப்பு வரும் ஜனவரி 29 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

பொதுவாக, விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கும், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு சென்று ஆய்வுகள் செய்வதற்கும் மற்றும் சான்றிதழ் வழங்குவதற்கும் பி.ஐ.எஸ் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள 30 நாட்கள் என்ற காலக்கெடு, நாட்டில் விஸ்கோஸ் செயற்கை பஞ்சு பயனாளர்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) விஸ்கோஸ் செயற்கை பஞ்சுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீட்டித்தால் மட்டுமே, இந்திய தரநிலைகள் பணியகம் தனது பணிகளை முடித்து தர சான்றிதழை வழங்க முடியும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஜனவரி 27ம் தேதி விஸ்கோஸ் செயற்கை பஞ்சின் பங்குதாரர்களின் கூட்டத்தை கூட்டி, அதில் விஸ்கோஸ் செயற்கை பஞ்சிற்கான தரக்கட்டுப்பாட்டு வரம்பு மற்றும் விஸ்கோஸ் சங்கிலியில் உள்ள பங்குதாரர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கபட்டது. இதில் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று மேலும் 60 நாட்கள் கால அவகாசத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நீட்டித்துள்ளார்.

இதுகுறித்து சைமா தலைவர் ரவி சாம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்: 60 நாட்கள் கால அவகாசத்தை நீட்டித்ததற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனால், பல்வேறு நாடுகளில் உள்ள விஸ்கோஸ் செயற்கை பஞ்சு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பி.ஐ.எஸ் தரச்சான்றிதழை பெற முடியும்.

இந்தோனேஷியா, ஆஸ்திரியா, ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, இங்கிலாந்து, இலங்கை, கிரீஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விஸ்கோஸ் ரேயான் பஞ்சை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை 60.76 மில்லியன் கிலோவும், ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை 77.07 மில்லியன் கிலோவும் இத்தொழில்துறை இறக்குமதி செய்துள்ளது. விஸ்கோஸ் செயற்கை பஞ்சு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் பி.ஐ.எஸ்-க்கும் தரக்கட்டுப்பாட்டு சம்பிரதாயங்களை முடிக்கவும், சான்றிதழ் வழங்கவும், போதுமான நேரம் தேவைப்படுகிறது.

நாட்டிலுள்ள பல நூற்றுக்கணக்கான விஸ்கோஸ் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் உள்நாட்டு விஸ்கோஸ் இழைகளைப் பயன்படுத்தினாலும், அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வணிகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறிப்பிட்ட வெளிநாட்டு விஸ்கோஸ் இழைகளை பெரிதும் சார்ந்துள்ளனர்.

தரக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்துவதன் கால அளவை நீட்டியுள்ளதால், மதிப்பு கூட்டப்பட்ட விஸ்கோஸ் ஜவுளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் எந்த சிரமும் இன்றி மார்ச் மாதம் வரை இறக்குமதியை பெறுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

மேலும் அரசின் தொழிற்துறைக்கு பயனளிக்க கூடிய இம்முடிவை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு விற்பனை செய்யும் அனைத்து வெளிநாட்டு விஸ்கோஸ் விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விரைவாக பி.ஐ.எஸ் விண்ணப்பங்கள் அனுப்பி சான்றிதழ்கள் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.