கீமோ தெரபியின் போது ஏற்படும் வாந்தி, குமட்டலை தடுக்க ஊசி அறிமுகம்

க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு புதிய மருந்துகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிதாக கீமோ தெரபி சிகிச்சை காரணமாக ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கும் விதமாக புதிய ‘அக்கிஞ்சியோ ஐ.வி.’என்னும் நரம்பு வழியாக செலுத்தும் ஊசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஊசியை சுவிஸ் நிறுவனமான ஹெல்சின் தயாரிக்கிறது.

இதை இந்தியாவில் விற்பனை செய்யும் உரிமையை க்ளென்மார்க் பெற்றுள்ளது. இந்த புதிய ‘அக்கிஞ்சியோ ஐ.வி.’ஊசி போஸ்நெடுபிட்டண்ட் (235 மிகி) மற்றும் பலோனோசெட்ரான் (0.25 மிகி) ஆகிய கூட்டு மருந்துகளை கொண்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் கீமோதெரபி சிகிச்சை அளிப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் இந்த ஊசியை செலுத்திக்கொண்டால் அது வாந்தி மற்றும் குமட்டல் வராமல் தடுக்கும். இந்த ஊசி ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய ஊசி அறிமுகம் குறித்து பேசிய க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிற்கான வர்த்தகத்தலைவரும், செயல் துணைத்தலைவருமான அலோக்மாலிக் கூறுகையில்: கீமோதெரபி என்பது புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ஒரு பொதுவான சிகிச்சையாகும்.

இந்த சிகிச்சை காரணமாக குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். எனவே இது ஏற்படாமல் தடுக்க நோயாளிகள் பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள். இந்த ஊசியை செலுத்திக்கொள்ளும் போது அதுபோன்ற மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இந்த ஊசி வாந்தி மற்றும் குமட்டல் உணர்வை தடுக்கும் திறன் கொண்டது என்று தெரிவித்தார்.

இது குறித்து ஹெல்சின் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜியோகால்டெராரி கூறுகையில்: ‘அக்கிஞ்சியோ ஐ.வி.’ ஊசியானது இந்தியாவில் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படாமல் தடுக்கும் சிறந்த மருந்தாகும். இதன் மூலம் அவர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும் என தெரிவித்தார்.

சமீபத்திய தேசிய புற்று நோய் பதிவுத்திட்ட தரவுகளின் படி, 2020 ம்ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் 13.9 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பதாகவும், அது 2025–ம் ஆண்டில் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.