ஆளுநர் ரவி மீதான புகார்: நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரை

ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரை செய்துள்ளார் .

கடந்த 9 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தில் உரை நிகழ்த்தியபோது, அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையில், சில பகுதிகளை வாசிக்காமல் ஆளுநர் ரவி தவிர்த்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மீது விமர்சனத்தை முன்வைத்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டு வருவது குறித்தும் குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதத்தை நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வழங்கினர். அப்போது ஆளுநர் செயல்பட்டு வரும் விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

குடியரசு தலைவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு குடியரசு தலைவர் அனுப்பியுள்ளார்.

நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குடியரசு தலைவர் தனது குறிப்புடன், முதலமைச்சரின் கடிதத்தையும் சேர்த்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.