“எப்போ வருவாரோ” ஆன்மீக சொற்பொழிவு துவக்கம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சார்பில் “எப்போ வருவாரோ” என்ற ஆன்மீக சொற்பொழிவு ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று துவங்குவது வழக்கம்.

இந்த வருடமும் புத்தாண்டு அன்று துவங்கி தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைப்பில், பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

துயர் தீர்க்கவில்லை என்றாலும், உன்னையே நினைப்பேன்!

தன்னிடம் இருந்த அரச வாழ்க்கையை விட்டுவிட்டு திருவரங்கத்தில் (ஸ்ரீ ரங்கம்) உள்ள அரங்கநாதரை காணவேண்டும் என தீராத தாகத்தில் இருந்த குலசேகர ஆழ்வார் குறித்து பாரதி பாஸ்கர் பேசினார். அவர் பேசியதன் சுருக்கம்:

8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலசேகர ஆழ்வார் சேரர் குலத்தின் மன்னர். சோழ, பாண்டிய நாட்டை வென்றெடுத்து, தமிழ்நிலம் முழுவதையும் ஆட்சி செய்தவர். மிகவும் செல்வ செழிப்புடன், ஆட்சி, அதிகாரம், படை பலம் என அத்தனையும் பெற்றிந்த அவர், தனது அரச பதவியை துறந்து விட்டு, திருவரங்கத்துக்கு சென்று, அடியார்களோடு, அடியாராக இருந்து புழுதியில் சகதியில் இருந்து தொண்டு செய்தார்.

மன்னராக இருந்த சமயத்தில், ராமாயண காவியத்தை வழக்கமாக தனது அரச சபையில் கேட்கும் பழக்கத்தை கொண்டிருந்த குலசேகரன், ராமன் போரிட செல்கிறான் என உபன்யாசர் கூறும்போது, தன்னை மறந்து ராமனுக்கு உதவ புறப்பட தயார் ஆகிவிட்டார். அவர் பெருமாள் மீது பாடிய 105 பாசுரங்களுக்கு பெருமாள் திருமொழி என்று பெயர். ராமன் மீது அவருக்கு அளவில்லாத பக்தி இருந்தது. பார்க்கும் அத்தனையும் அவரது கண்களுக்கு ராமனாகவே தெரிந்தார்.

“உன்னுடைய அருளுக்காக ஏங்குவேன். ஆனால் என்னுடைய துயரத்தை நீ தீர்க்கவில்லை என்றாலும், உன்னை நினைப்பதை நான் நிறுத்த மாட்டேன்” என தனது பாடல் வழியாக தன் பக்தியின் ஆழத்தை எடுத்துரைக்கிறார் குலசேகரன்.

குலசேகர ஆழ்வார், தன்னை ஒரு பெண்ணாக நினைத்து அதாவது, கிருஷ்ணரின் தாயாகவும், காதலியாகவும் தன்னை பாவித்துக் கொண்டு, அவர் மீது பாசுரங்களை பாடியது குறித்து விளக்கி கூறினார்.

அந்த வகையில் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய “எப்போ வருவாரோ” – 2023 ஆம் ஆண்டிற்கான முதல் நாள் நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், ‘குலசேகர ஆழ்வார்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், கங்கா மருத்துவமனையின் நிறுவனர் சண்முகநாதன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.