கொடிசியாவில் வரும் 23 ஆம் தேதி துவங்கும் ‘கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா’

ரூ.100 கோடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பு

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழாவின் 8 வது பதிப்பு வரும் 23 ஆம் தேதி துவங்கி ஜனவரி 1 வரை 10 நாட்கள் கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்துகொன்டு ஷாப்பிங் திருவிழாவினை துவக்கி வைக்கிறார்.

இதுகுறித்து இன்று, கொடிசியா தலைவர் திருஞானம், கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் நந்தகோபால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு 270 கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். 400 ஸ்டால்கள் அமைக்கப்படும். இதில் பல்வேறு பொழுதுபோக்கு, உணவு மற்றும்  விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.

சாலமன் பாப்பைய்யா, ராஜா, பாரதி பாஸ்கர் மற்றும் குழுவினரின் பட்டிமன்ற நிகழ்வு 30 ஆம் தேதியும், 24 அன்று பழ.கருப்பையா, மோகன சுந்தரம் குழுவினரின் பட்டிமன்றமும் நடைபெற உள்ளன. 25 ஆம் தேதி லக்ஷ்மண் ஸ்ருதியின் நேரடி இசை கச்சேரி நடைபெறும்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நட்சத்திரங்கள் பங்குபெறும் இசை நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, மிமிகிரி என பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கொடிசியா உற்பத்தி சார்ந்த பல முக்கிய நிகழ்வுகளை நடத்தியுள்ளது. ஆனால் இந்த ஷாப்பிங் திருவிழா வர்த்தகர்களுக்கு, குறிப்பாக இந்த பிராந்தியத்தின் சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் நடத்தப்படுகிறது.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு ரூ.100 கோடி வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விழாவிற்கு 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழாவிற்க்கான நுழைவு கட்டணம் ரூ.50 (ஒரு நபருக்கு) மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.