ஆர்.வி கல்லூரியில் கால்பந்து போட்டி

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரி மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டியை நடத்தியது. இப்போட்டியில் காரமடை, சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பள்ளிகளின் கால்பந்து விளையாட்டு வீரர்கள் சுமார் 14 அணியினர் பங்கேற்று விளையாடினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

காரமடை, காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பெற்ற ஊட்டி சாக்ரெட் ஹார்ட் மேல்நிலை பள்ளி மற்றும் இரண்டாம் இடம் பெற்ற கோவை மணி மேல்நிலைப்பள்ளி அணியினருக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், குழந்தைகள் நல அறக்கட்டளையின் தலைவர் பத்மநாபன், கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.