இலவச பேருந்து பயணத்தில் கோவையில் 11.64 கோடி நபர்கள் பயணம்

– ஆட்சியர் தகவல்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகளில் 11.64 கோடி நபர்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2022 வரை சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் 11.57 கோடி மகளிரும், 5,75 இலட்சம் மாற்றுத்திறனாளிகளும், 32,000 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும், 66,000 திருநங்கைகளும் என மொத்தம் 11.64 கோடி நபர்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.