கருப்பைவாய் புற்றுநோய் குறித்த சர்வதேச மருத்துவ கருத்தரங்கம்

பிறப்புறுப்பு தொற்றுகள் மற்றும் புற்றுநோய்களுக்கு எதிரான ஆசியா- ஓசியானியா ஆராய்ச்சி அமைப்பும் (AOGIN) மற்றும் அனைத்திந்திய பெண்கள் மருத்துவர்கள் அமைப்பின் கோவைக் கிளையும் (COGS) இணைந்து கோவை ரெசிடென்சி டவர்ஸில் சர்வதேச மருத்துவ கருத்தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கு நாளையும் நடைபெற உள்ளது.

இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவிற்கு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன், கோவை ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் அறங்காவலரான நந்தினி ரங்கசாமி சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மிக முக்கியமானது கருப்பைவாய் புற்றுநோய். இந்தப் புற்றுநோயால் நமது நாட்டில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், எட்டு நிமிடங்களுக்கு ஒரு பெண்ணை நாம் இழந்து வருகிறோம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உண்மையில் மனித உயிர்களைப் பறிக்கும் இந்த புற்றுநோயின் ஆரம்பம் ஒரு வைரஸ் தொற்று என்பதால், அதனைத் தவிர்க்க உதவும் தடுப்பூசி பற்றியும், அப்படி புற்றுநோய் ஏற்பட்டுவிட்டால் கண்டறியும் வழிமுறைகள் பற்றியும் ஒரு விழிப்புணர்வை அனைவருக்கும் அளிக்கும் நோக்கில் இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவக் கருத்தரங்கம், பெண்களின் ஆரோக்கியம் குறித்தும், குறிப்பாக பெண்களுக்கு கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் HPV தடுப்பூசி குறித்தும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளைக் கூட திறம்படக் கண்டறியும் ஸ்கிரீனிங் சோதனைகளிலும், அதிலும் முக்கியமாக சோதனைக்காக மருத்துவரிடம் செல்வதற்குப் பதிலாக பெண்கள் தாங்களாகவே எடுக்கக்கூடிய பரிசோதனைகளைக் குறித்த விழிப்புணர்வையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.